அனல் பறக்கும் உ.பி.. யோகி கோட்டையில் அகிலேஷ் யாத்திரை.. சமாஜ்வாதி கோட்டைக்குள் அமித் ஷா
டெல்லி: உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொகுதியான கோரக்பூரில் இருந்து "சமாஜ்வாதி விஜய் யாத்திரை" மூன்றாவது கட்ட சுற்றுப் பயணத்தை இன்று, தொடங்குகிறார் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்.
இன்னொரு பக்கம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அகிலேஷ் யாதவின் லோக்சபா தொகுதியான ஆசம்கர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதனால் அடுத்த ஆண்டு துவக்கத்தில், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ள, உத்தரபிரதேச அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் அசம்கரில் மாநில பல்கலைக்கழகத்திற்கு இன்று, அடிக்கல் நாட்டினர். அப்போது, சமாஜ்வாதி கட்சியை அமித் ஷா கடுமையாக தாக்கி பேசினார்.

மாஃபியா ஆட்சி
அமித் ஷா பேசுகையில், உத்தரபிரதேசத்தை மாஃபியா ஆட்சியில் இருந்து விடுவிக்கும் பணியை யோகி அரசு செய்துள்ளது. அசம்கர் இதற்கு உதாரணம். கைரானாவிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். பெண்கள் உயர்கல்வி பெற முடியவில்லை. இன்று மாஃபியா உத்தரபிரதேசத்தை விட்டு வெளியேறியுள்ளது. இப்போது இங்கே சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது என்றார்.

கோரக்பூர் பிராந்தியம்
2017 உ.பி., சட்டசபை தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் அலையில், பா.ஜ., அமோக பெரும்பான்மை வெற்றி பெற்றது. பா.ஜ.க.வின் அமைப்புப்படி பிரிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் அக்கட்சி எதிர்பாராத வெற்றியைப் பெற்றது. கோரக்பூர் பிராந்தியத்தில் (பஸ்தி, கோரக்பூர் மற்றும் அசம்கர் பிரிவுகள்) உள்ள 62 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 46 இடங்களை கைப்பற்றின.

பூர்வாஞ்சல் பாஜக நிலைமை
இருப்பினும், பூர்வாஞ்சல் பகுதியிலுள்ள அசம்கர் மாவட்டத்தில் மட்டும் பாஜகவால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. மறுபுறம், அசம்கரில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 5 இடங்களை சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது, 4 இடங்கள் பகுஜன் சமாஜ் கட்சி கைக்கு சென்றது. அதே நேரத்தில் பாஜக ஒரு இடத்தை மட்டுமே பெற்றது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசம்கர் மாவட்டத்தின் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல்களில், இரண்டிலும் பாஜக தோற்கடிக்கப்பட்டது. அசம்கர் எப்போதுமே சமாஜவாதியின் கோட்டையாக இருந்து வருகிறது. எனவே இந்த முறை பூர்வாஞ்சலுக்கு பா.ஜ.க. முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

கோரக்பூர் பாஜக கோட்டை
2014 லோக்சபா தேர்தலின் போது அசம்கர் மாவட்டத்தின் லால்கஞ்ச் தொகுதியை பாஜக வென்றது, மேலும் சமாஜ்வாடி கட்சியின் கோட்டைக்குள் கால்பதிக்க அக்கட்சி விரும்புகிறது. இந்த பக்கம் கோரக்பூர் பக்கம் வந்தால், 2017 சட்டசபை தேர்தலில் கோரக்பூரில் சமாஜ்வாதி கட்சியால் ஒரு தொகுதியையும் வெல்ல முடியவில்லை. கோரக்பூர் பிராந்தியத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளில் 8 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது, ஒரு இடம் பகுஜன் சமாஜ் கட்சிக்கு கிடைத்தது.

அகிலேஷ் யாதவ்
குஷிநகரில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் 6 இடங்களில் பாஜகவும், ஒன்றில், காங்கிரஸும் வெற்றி பெற்றன. 2012 சட்டமன்றத் தேர்தலில், சமாஜ்வாதி மூன்று இடங்களையும், பகுஜன் சமாஜ் ஒரு இடத்தையும், காங்கிரஸுக்கு 2 இடங்களையும், பாஜக ஒரு இடத்தையும் வென்றன.
எனவே, அகிலேஷ் யாதவ் இந்த பகுதிகளில் கவனம் செலுத்துகிறார்.


Click it and Unblock the Notifications
