அந்த ட்வீட்டை டெலிட் பண்ணுங்க! ட்விட்டரை கேட்ட இந்தியா! இந்த நாடு தான் முதலிடமாம்! இத்தனை தடவையா?
டெல்லி : ட்விட்டரில் அங்கீகரிக்கப்பட்ட செய்தி நிறுவனங்களின் பதிவுகளை நீக்கக் கோரி இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ட்விட்டர் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ட்ரான்பரன்சி ரிப்போர்ட் எனும் வெளிப்படை தன்மை அறிக்கையில் கூறியுள்ளது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வரிசையில் சமூக வலைதளங்களில் ஜாம்பவான் என ட்விட்டர் நிறுவனத்தை கூறலாம். அந்த அளவுக்கு இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் அதிக அளவில் ட்விட்டர் நிறுவனத்தில் கோடிக்கணக்கான பயனர்கள் கணக்கு வைத்துள்ளார்கள்.
அமெரிக்க அதிபர், இந்திய குடியரசுத் தலைவர் இந்திய பிரதமர் தொடங்கி, சாதாரண மக்கள் வரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தொடங்கி அன்றாட நிகழ்வுகள் வரை ட்விட்டரில் வெளியிடும் வழக்கம் அதிகரித்து வருகிறது.

ட்விட்டர்
மேலும் பிரபல செய்தி நிறுவனங்கள், பத்திரிகைகள் அமைப்புகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரும் தங்கள் கருத்துகள் செய்திகள் ஆகியவற்றை வெளியிடவும், கருத்துகளை தெரிவிக்கவும் ட்விட்டரை பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான செய்தி நிறுவனங்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ஆகியவை அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளைக் கொண்டுள்ளன.

பதிவுகள் நீக்கம்
இந்நிலையில் ட்விட்டரில் அங்கீகரிக்கப்பட்ட செய்தி நிறுவனங்களின் பதிவுகளை நீக்கக் கோரி இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ட்விட்டர் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ட்ரான்பரன்சி ரிப்போர்ட் எனும் வெளிப்படை தன்மை அறிக்கையில் கூறியுள்ளது. அதன்படி கடந்த 2021ம் ஆண்டில் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், இந்திய அரசு 114 பதிவுகளை நீக்க உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளது.

கோரிக்கை
குறிப்பாக ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 89 பதிவுகளை நீக்க வலியுறுத்தி உத்தரவிட்டதாகவும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவை பெரும்பாலும் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கை நிறுவனங்களின் கணக்குகளில் பதிவிடப்பட்ட செய்திகள் என்றும், இதே காலகட்டத்தில் இந்தியாவை விட அமெரிக்கா அதிக பதிவுகளை நீக்க உத்தரவிட்டதாகவும் ட்விட்டர் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலிடம் யார்?
குறிப்பாக பத்திரிகையாளர்கள், செய்தி நிறுவனங்கள் பதிவிடும் செய்திகளை நீக்கச் சொல்வதில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாகவும், செய்திகளை பதிவிடும் பத்திரிக்கையாளர்களின் கணக்குகளை முடக்கச் சொல்வதிலும் இந்தியா அரசு முதலிடத்தில் இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் மட்டும் இதுவரை 20க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications