அதிகரிக்கும் கொரோனா...ஐசியூவில் கேரளா : பினராயி விஜயன் அரசை வறுத்தெடுக்கும் பாஜக, காங்கிரஸ்
மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் வசிக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் எதிர்காலத்தில் கேரளாவைப் போல அதிக பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று மத்திய அமைச்சர் முரளிதரன் கூறியுள்ளார்.
டெல்லி: கேரளாவில் கொரோனா பரவல் புதிய உச்சம் தொட்டு வருவதற்கு பினராயி விஜயன் அரசு மீது பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் வசிக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் எதிர்காலத்தில் கேரளாவைப் போல அதிக பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று மத்திய அமைச்சர் முரளிதரன் கூறியுள்ளார். கேரளா ஐசியூவில் இருப்பதாக காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா நோயாளிகளில் 68 சதவீதம் கேரளாவின் பங்கு என்று பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தைப் பொறுத்தவரை கொரோனா பாதிப்பு 5 நாட்களுக்கு பிறகு சற்றே உயர்ந்து 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ஓணம் பண்டிகைக்காக அனுமதிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 31,445 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பாதிப்பு விகிதம் 30 சதவிகிதத்தை நெருங்கியுள்ளது. அதே போல 215 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு விகிதமானது 19.03 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

உச்சம் தொட்ட பாதிப்பு
கேரளாவில் தற்போது வரை 38,83,429 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19,972 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக எர்ணாகுளம் மாவட்டத்தில் 4,048 பேரும், திருச்சூரில் 3,865 பேரும், கோழிகோட்டில் 3,680 பேரும், மலப்புரத்தில் 3,502 பேரும், பாலக்காட்டில் 2562 பேரும், கொல்லத்தில் 2479 பேரும், கோட்டயத்தில் 2050 பேரும், கன்னூரில் 1930 பேரும், ஆழப்புழாவில் 1874 பேரும், திருவனந்தபுரம் 1700 பேரும், இடுக்கி, பத்தனம்திட்டாவில் சுமார் 1000 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகரிக்கும் பாதிப்பு
கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அங்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. கேரளாவில் ஆய்வு செய்த மத்திய குழுவினர் அளித்த தகவலை தொடர்ந்து வைரஸ் தாக்கம் குறித்து ஆய்வு செய்ததில் பெருமளவு டெல்டா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த வைரஸ் மாற்றமடைந்துள்ளதால் ஏற்கெனவே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டபோதிலும் அவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

கவலையளிக்கும் பாதிப்பு
ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அல்லது தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தாலும் வைரஸ் உருமாற்றம் அடைவதால் அதனை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி போதுமானதாக இல்லை. இது மிகவும் கவலையளிக்கக் கூடியது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த உருமாற்றம் அடைந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதாக இருப்பதால் அதிகமானோர் பாதிக்கப்படுவதாகவும்

பரவும் கொரோனா
ஓணம் பண்டிகைக்காக அனுமதிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளதாகவும் அடுத்த 10 நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். அனைவரும் தாமாக பரிசோதனைக்கு முன்வரவேண்டும். கொரோனா பாதிப்பு ஆரம்பத்திலே கண்டறியப்பட்டால் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாக்க முடியும் என்றும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல்
பொதுமக்களையும், அவர்களின் உயிரையும் காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அடுத்த நான்கு வாரங்களில் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். வரவிருக்கும் மூன்றாம் அலை கொரோனா அச்சுறுத்தலை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் விமர்சனம்
கேரளாவின் நிலைமையை சுட்டிக்காட்டி, எதிர்வரும் பண்டிகை நாட்களில் மற்ற மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே கேரள மக்களின் உயிரை காப்பதில் மாநில முதல்வர் பினராயி விஜயன் தோல்வியடைந்துள்ளார் என்று மத்திய அமைச்சர் முரளிதரன் கடுமையாக விமர்சித்துள்ளார். இடது சாரி அரசாங்கம் மக்களைக் காக்க எதுவும் செய்யவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதிக பாதிப்பு
இதுபோன்ற மோசமான சூழ்நிலை கேரளாவின் கொரோனா வெற்றிக்கதைகளுக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளதாக கூறியுள்ளார் முரளிதரன். கேரளாவின் நிலைமை பற்றி ஒரு வார்த்தை கூட முதல்வர் பேசவில்லை. கேரளாவில், ஒரு நோயாளி முன்பை விட 1.5 சதவிகிதம் வரை தொற்றுநோயை பரப்ப முடியும் என்றும் முரளிதரன் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்கள் எதிர்காலத்தில் கேரளாவைப் போல அதிக பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கூறினார், இதைப்பார்த்து வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் புரிந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.

ஐசியூவில் கேரளா
கேரள அரசு கொரோனாவை சரியாக கையாளவில்லை என கூறி இளைஞர் காங்கிரஸார், அம்மாநில தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், கொரோனா பரவலால் கேரளா ஐசியுவில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இது, கேரளா ஐசியுவில் இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக நடைபெறும் அடையாள போராட்டம். கேரளாவை ஆம்புலன்சில் தூக்கிச் செல்வதற்கு முன்பு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அவசர ஆலோசனை
மூன்றாவது அலையில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் கேரளா மற்றும் மகாராஷ்டிரா முக்கிய பங்கு வகிக்கும் என்றும் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கேரளாவில் கொரோனா உச்சம் தொட்ட நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்திலும் சில தினங்களுக்கு பிறகு, தினசரி கொரோனா பாதிப்பு நேற்று ஐந்தாயிரத்தை கடந்தது. இதனையடுத்து இரு மாநிலங்களிலும் கரோனா அதிகரித்து வருவது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளரும், மத்திய உள்துறை செயலாளரும் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்த இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications