பாஜகவின் “கடைசி சாவி”.. 2024 தேர்தலில் நிர்மலாவின் பட்ஜெட் ஏன் முக்கியம்? எதிர்பார்த்தது கிடைத்ததா?
மோடி 2.O அரசின் கடைசி முழு நீள பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கான சாவியாக இது பார்க்கப்படுகிறது.
டெல்லி: மோடி 2.O அரசின் கடைசி முழு நீள பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கான சாவியாக இது பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் இடம்பெறப்போகும் திட்டங்கள் மற்றும் அதன் மூலம் ஏற்படும் தாக்கங்கள் தேர்தலில் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குயது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சூழலில், மோடி 2.O அரசின் கடைசி முழு நீள பட்ஜெட் இதுவாகும். எனவே இயல்பாகவே மற்ற பட்ஜெட்டுகளை காட்டிலும் இந்த பட்ஜெட் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது.

முக்கியத்துவமான பட்ஜெட்
எப்படி ஒரு தேர்தல் அறிக்கை ஒரு கட்சியின் வெற்றிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறதோ, அதேபோல் ஆளும் அரசின் கடைசி தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் என்பதும் அதன் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கும். காரணம் பட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்க்கும் விசயங்கள், கவர்ச்சிகரமான திட்டங்கள் இடம்பெற்றால் அது தேர்தலில் எதிரொலிக்கும்.

கடைசி ஆண்டை தீர்மானிக்கும் பட்ஜெட்
ஏனெனில் தேர்தலுக்கு முந்தைய கடைசி பட்ஜெட்தான் ஆளும் அரசின் கடைசி ஒரு ஆண்டை தீர்மானிக்கும். கடைசி ஆண்டில் ஏற்படும் பொருளாதார சூழல், செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஏற்படப்போகும் சிக்கல் அனைத்தும் கடைசி நிதிநிலை அறிக்கையை சார்ந்தே இருக்கும் என்பதால் இதன் மீதான பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

வரி வகிதம்
குறிப்பாக வரி விகிதம், வேலை வாய்ப்பு, கல்வி, விவசாயம் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் ஏதேனும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக இந்தியாவில் பெருமளவில் வசிக்கும் நடுத்தர மக்கள் வருமான வரியிலிருந்து ஏதாவது ஒரு வகையில் சலுகை கிடைக்குமா? என்று எதிர்பார்க்கின்றனர். கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட வருமான வரி வகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

வரிச் சலுகை
இதனால் கடந்த ஆண்டுகள் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். கடந்த 2017 - 18 நிதியாண்டிற்கு பிறகு நடுத்தர மக்கள் செலுத்தும் வருமான வரித் தொகை மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. அதேபோல் 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு வருமான வரி வகிதத்திலும் மாற்றம் செய்யப்படவில்லை. இந்த சூழலில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கு வழங்கப்பட்ட வருமான வரி விலக்கு ரூ.7 லட்சமாக உயர்த்தப்படும் என நிதியமைச்சர் அறிவித்து உள்ளார்.

விவசாயம், வேலை வாய்ப்பு
இதனால் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் வருமான வரி கட்ட தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. அத்துடன் வருமான வரிக்கான உச்சவரம்பு ரூ2.5 லட்சத்தில் இருந்து ரூ 3 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. வருமான வரி தொடர்பான நிதியமைச்சரின் அறிவிப்பு திருப்தியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் விவசாயம், வேலை வாய்ப்பு தொடர்பான முக்கிய திட்டங்கள் இதில் பெரிய அளவில் இடம்பெறாதது அவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம்.












Click it and Unblock the Notifications