சுதந்திர தினத்தின் போது.. தேச தலைவர்களை கொச்சைப்படுத்துவதா? பிரதமர் மோடியை விளாசிய சோனியா காந்தி
டெல்லி: நாடு முழுவதும் 76வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்தியாவின் அடையாளங்களாக திகழும் தலைவர்களை பிரதமர் மோடி அவமதித்துள்ளார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லி செங்கோட்டையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களுக்கு புகழாரம் சூட்டினார்.
இந்நிலையில், "சுதந்திர தினத்தன்று காந்தி, நேரு உள்ளிட்ட தலைவர்களை கொச்சைப்படுத்துவதா?" என காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் 76வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் நாட்டு மக்களுக்கு சிறப்புரை ஆற்றினார். இதில், "நாட்டின் சுதந்திரத்திற்காக தனது வாழ்க்கையை கொடுத்த காந்தி, சுபாஷ் சந்திர போஸ், பாபாசாகேப் அம்பேத்கர், சர்வாக்கர் ஆகியோரின் தியாகத்திற்கு மக்கள் நன்றிகடன் பட்டுள்ளனர்" எனக் கூறினார்.

இந்நிலையில் "சுதந்திர தினத்தன்று காந்தி, நேரு உள்ளிட்ட தலைவர்களை கொச்சைப்படுத்துவதா?" என கேள்வியெழுப்பிய காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மோடிக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். மேலும், "கடந்த 75 ஆண்டுகளில் நாங்கள் நிறைய சாதித்துள்ளோம், ஆனால் தற்போதைய சுயநல அரசு சுதந்திர போராட்ட வீரர்களின் மகத்தான தியாகங்கள் மற்றும் நாட்டின் புகழ்பெற்ற சாதனைகளை அற்பமானதாக நிரூபிப்பதில் பிடிவாதமாக உள்ளது, இதை ஏற்க முடியாது" என்றும் கூறியுள்ளார்.
மேலும், "அரசியல் ஆதாயங்களுக்காக வரலாற்று உண்மைகள் குறித்த தவறான அறிக்கைகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. மட்டுமல்லாது காந்தி-நேரு-படேல்-ஆசாத் போன்ற பெரிய தேசிய தலைவர்களின் மீது இந்த அரசு கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பி வருகிறது. இதனை காங்கிரஸ் கடுமையாக எதிர்கிறது" என சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். முன்னதாக நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை சோனியா காந்தி பகிர்ந்துகொண்டார்.
முன்னதாக இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக வீடுகள் தோறும் தேசியக்கொடியை ஏற்றுமாறு 'ஹர் கர் திரங்கா' எனும் கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்து நாடு முழுவதும் அனைவரின் வீடுகளிலும் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டிருந்தது. இதனை பிரதிபலிக்கும் விதமாக பிரதமர் மோடியும் இன்று வெள்ளை நிறத்தாலான தேசியக்கொடி பதிக்கப்பட்ட தலைப்பாகையை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
டெலிபிராம்ப்டர் இல்லை-பேப்பர் குறிப்புகளுடன் 82 நிமிடம் உணர்ச்சிமிகு உரையாற்றிய பிரதமர் மோடி