தெரிந்துதான் நடக்கிறது.. தொடர்ந்து சரியும் மோடியின் இமேஜ்.. புதிய நபரை முன்னிறுத்த பாஜக பிளான்!
பிரதமர் மோடி தொடர் விமர்சனங்களை சந்தித்து வருவதால், பாஜக லோக்சபா தேர்தலுக்கு பின் முக்கிய மாற்றங்களை செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
Recommended Video
டெல்லி: பிரதமர் மோடி தொடர் விமர்சனங்களை சந்தித்து வருவதால், பாஜக லோக்சபா தேர்தலுக்கு பின் முக்கிய மாற்றங்களை செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதற்காக பாஜக பெரிய திட்டங்களை வைத்துள்ளதாக தெரிகிறது.
பொதுவாக இந்திய அரசியலில் கட்சி சார்ந்த ஆதரவே அதிக வெற்றிகளை கொடுத்து இருக்கிறது. எந்த வேட்பாளர் நிற்கிறார் என்பதை பார்க்காமல் தங்கள் கட்சியின் சின்னத்தை மட்டும் பார்த்து வாக்களிக்கும் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
அதே சமயம் சிலர் கட்சியை பார்க்காமல், கட்சியை வழி நடத்தும் தலைவர்களை மட்டும் பார்த்து வாக்களிப்பார்கள். எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, மமதா பானர்ஜி போல. அப்படித்தான் மோடியை மட்டும் கவனத்தில் கொண்டு வாக்களிக்கும் மக்களும் இருக்கிறார்கள்.

மோடி இமேஜ்
பிரதமர் மோடி, லோக்சபா தேர்தலில் 2014ல் நிற்கும் முன், மிகப்பெரிய அளவில் வைரலாக்கப்பட்டார். குஜராத் மாடல்தான் அப்போது இந்தியா முழுக்க பேச்சாக இருந்தது. அமெரிக்காவில் ஒபாமாவிற்காக இணையத்தில் பிரச்சாரம் செய்த குழு கூட மோடிக்காக களத்தில் இறங்கி வேலை பார்த்தது. மோடியின் இமேஜ் அப்படித்தான் உருவாக்கபட்டது.

ஆனால் என்ன
மோடி புத்திசாலி, மோடி வலுவானவர், மோடி அரசியல் தெரிந்தவர், மோடிக்கு அனுபவம் இருக்கிறது என்று அவருக்கான இமேஜ் பெரிய அளவில் உருவாக்கபட்டது. அதற்கு அப்படியே எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இமேஜ் பப்பு என்று கலாய்க்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மோடியின் இமேஜ் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வருகிறது.

என்ன நடந்தது
மோடியின் இமேஜ் சரிவிற்கு பின் வரும் உதாரணங்களை கூறலாம்.
1. மேகங்கள் வழியாக ராணுவ விமானம் செல்லும் போது ரேடாரில் கண்டுபிடிக்க முடியாது. அதனால் மேக மூட்டம் இருந்த மோசமான வானிலையில் இந்திய ராணுவத்தை பாலக்கோட்டில் தாக்குதல் நடத்த சொன்னேன் என்று மோடி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார்.
2. அதற்கு அடுத்த பேட்டியில், 1988ல் நான் டிஜிட்டல் கேமராவும், இ மெயிலும் வைத்து இருந்தேன், என்று குறிப்பிட்டார். அப்போது இந்த இரண்டுமே பயன்பாட்டில் கிடையாது. மோடியின் இந்த இரண்டு பேச்சுகளும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
3. அதேபோல் ராஜீவ் காந்தியை ''ஊழல்வாதியாக இறந்தார்'' என்று மோடி குறிப்பிட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பெரிய சரிவு
இதனால் மோடியின் இமேஜ் உலக அளவில் பெரிய சரிவை சந்தித்து இருக்கிறது. மோடியின் ''மேகம் - ரேடார்'' பேச்சை பாகிஸ்தானியர்கள் வைத்து கலாய்த்து எடுத்துவிட்டனர். இமெயில் பேச்சை அமெரிக்கா தொடங்கி அனைத்து நாடுகளிலும் கலாய்த்து வருகிறார்கள். உலக அளவில் இந்த இரண்டு பேச்சும் பெரிய சர்ச்சையை சந்தித்துள்ளது.

எப்படி தவறியது
பாஜக மோடியின் இமேஜை உருவாக்குவதில் பெரிய அளவில் கவனம் செலுத்தியது. மிக முக்கியமாக உலக அரங்கில் மோடியை வலுவான நபராக காட்டி வந்தது. குறைந்தபட்சம் இணையத்திலாவது மோடி வலுவான நபராக காட்டப்பட்டார். ஆனால் அதில் சரிவு ஏற்பட தொடங்கி உள்ளது. இதை பாஜகவும் வேடிக்கை பார்த்தபடி உள்ளது. பாஜக இதை குறித்து பெரிய அளவில் கவலை படவில்லை என்று பேசிக்கொள்கிறார்கள்.

கவலை இல்லை
அதாவது மோடியின் இமேஜ் சரிவது பாஜகவிற்கு தெரிந்ததுதான். அதுவும் தேர்தல் நேரத்தில் நல்லதுதான் என்று பாஜகவின் தலைமையில் சிலர் முடிவெடுத்து இருப்பதாக கூறுகிறார்கள். மோடிக்கு பதிலாக வேறு ஒரு நபரை கட்சியில் முன்னிறுத்த இதுவே சரியாக இருக்கும் என்று பாஜக நினைப்பதாக கூறுகிறார்கள்.

பாஜக திட்டம் இதுதான்
அதன்படி பாஜக சரிவை சந்திக்கும்பட்சத்தில் அனைத்து குற்றச்சாட்டையும் மோடி மீது போட்டுவிட்டு, கட்சியின் பெயரை காப்பாற்ற கூட பாஜக நினைக்கலாம். மேலும், மோடி மீது புகார்களை போட்டுவிட்டு புதிய நபரை முன்னிறுத்தலாம். இதன் மூலம் புதிய மாநில கட்சிகளை (மோடியை ஏற்காத கட்சிகளை) கூட்டணிக்கு அழைக்கலாம் என்று பாஜக நினைப்பதாக கூறுகிறார்கள்.

வாய்ப்பு உள்ளது
இப்படி புதிய பிம்பமாக பாஜக அமைச்சர் நிதின் கட்கரி முன்னிறுத்தப்பட கூட வாய்ப்புள்ளது. சாலை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி இருக்கிறார் என்று நிதின் மீதான பிம்பம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்டது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் முழு ஆதரவும் இவருக்கு இருப்பதால், பாஜகவில் விரைவில் பெரிய மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications