கனமழையால் வெள்ளம் சூழ்ந்த தலைநகர் டெல்லி... நத்தையாக ஊர்ந்த வாகனங்கள்
டெல்லியில் திடீரென பெய்த கனமழையால் நகரெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது வாகனங்கள் நத்தை போல மெதுவாக ஊர்ந்து சென்றன.
டெல்லி: டெல்லியில் பருவமழை தொடங்கியுள்ளது. முதல்நாளிலேயே வெளுத்து வாங்கிய மழையால் தலைநகர் டெல்லியில் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது வாகனங்கள் நத்தை போல மெதுவாக ஊர்ந்து சென்றன.
நாட்டில் ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தலைநகர் டெல்லியில் நேற்று காலை வரை மழை பெய்வதற்கான அறிகுறியே இல்லை.

எனினும், நண்பகலுக்கு பின்னர் மழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. இதனால் மக்கள் ஆவலுடன் மழையை எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது இதனால் வானிலை மையத்தை பலரும் திட்டித்தீர்த்தனர்.
இந்த நிலையில், டெல்லியில் இன்று காலை ஷாஜகான் சாலை, அக்பர் சாலை, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் பருவமழை பெய்ய தொடங்கியது. கருமேகங்கள் சூழ்ந்திருக்கவே காலை நேரத்தில் சாலையில் சென்ற வாகனங்கள் வெளிச்சத்திற்காக முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன.
டெல்லியில் ஊரடங்கு தளர்வுகளால் சாலைகளில் வாகனங்களும் ஓட தொடங்கியுள்ளன. திடீரென பெய்த கனமழையால் நகரெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடவே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நகரின் முக்கிய சாலைகளில் வாகனங்கள் நத்தையாக ஊர்ந்து சென்றன. ஒரே இடத்தில் அதிக அளவிலான வாகனங்கள் குவியவே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே கனமழை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications