முல்லை பெரியாறு அணை உறுதியை வயதை வைத்து கணக்கிடக்கூடாது - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில்
முல்லை பெரியாறு அணையின் உறுதித்தன்மையை அதன் ஆண்டுகளை வைத்து கணக்கிடகூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
டெல்லி: முல்லை பெரியாறு அணையின் உறுதித்தன்மையை அணையின் வயதை வைத்து கணக்கிடாமல் பராமரிப்பு, புதுப்பித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் உறுதித்தன்மையை கணக்கிடவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக டாக்டர் ஜோசப் என்பவரும், சுரக்ஷ்சா பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட் அமைப்பும் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
முல்லைப் பெரியாறு அணை கட்டமைப்பு ரீதியாக பலவீனமாகவும், இயற்கை சீற்றத்தால் செயலிழக்கும் அபாயம் உள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் நீர், சுற்றுசூழல், சுகாதாரத்துக்கான ஆராய்ச்சி பல்கலைகழகத்தின் ஆய்வில் கூறப்பட்டுள்ளதாக சேர்ந்த ஜாய் ஜோசப் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த மனுக்களின் மீதான விசாரணை கடந்த அக்டோபர் 28ஆம் தேதியன்று நீதிபதிகள் ஏஎல் கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, சிடி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

கேரளாவின் ஜோசப் மனு
முல்லைப்பெரியாறு வழக்கில் அணையின் இயக்கம், செயல்பாடு பராமரிப்பு உள்ளிட்டவை அடங்கிய Rule curve தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த நிலை அறிக்கைக்கு பதில் கேரளாவை சேர்ந்த மனுதாரரான ஜாய் ஜோசப் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மத்திய அரசின் நிலை அறிக்கை தொழில்நுட்ப ரீதியாக தவறாக உள்ளது என கூறியுள்ள அவர், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள வாதங்கள் பொருத்தமற்ற வகையில் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

முல்லைப்பெரியாறு அணை பலவீனம்
உலகில் உள்ள 6 அணைகள் கட்டமைப்பு ரீதியாக பலவீனமாகவும், இயற்கை சீற்றத்தால் செயலிழக்கும் அபாயம் உள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் நீர், சுற்றுசூழல், சுகாதாரத்துக்கான ஆராய்ச்சி பல்களைகழகத்தின் ஆய்வில் கூறப்பட்டுள்ளது, அவ்வாறு ஆபத்தான நிலையில் உள்ள 6 அணைகளில் முல்லை பெரியாறு அணையும் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது, இதில் ஏற்கனவே 4 அணைகளின் இயக்கம் மற்றும் செயல்பாடு நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், ஜிம்பாபே நாட்டில். உள்ள கரிபா அணையும், இந்தியாவில் உள்ள முல்லை பெரியாறும் மட்டுமே இயக்கத்தில் உள்ளது, இது ஆபத்தான ஒன்றாகும்.

35 லட்சம் மக்களுக்கு ஆபத்து
பெருவெள்ள காலத்தில் முல்லை பெரியாறு அணை ஆபத்தான வகையில்தான் இயக்கப்பட்டு வருவதாகவும், இதனால் அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் 35 லட்சம் மக்களின் உயிருக்கு அபாயம் உள்ளதாகவும் ஜாய் ஜோசப் தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளார். இதுபோன்ற அறிவில்பூர்வமான ஆராய்ச்சி தகவல்களை எல்லாம் மத்திய அரசு மறைத்துள்ளது, அவர்களின் நிலை அறிக்கை என்பது தரவுகள் அடிப்படையிலும், தொழில்நுட்ப ரீதியாகவும் தவறானது. எனவே அந்த அறிக்கையை நிராகரிக்க வேண்டும் எனவும் பதில் மனுவில் மனுதாரர் ஜாய் ஜோசப் தெரிவித்துள்ளார்.

அணையின் இயக்கம் பராமரிப்பு
ஏற்கனவே, முல்லை பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசின் தரவுகள் தவறானவை என மத்திய அரசு பதிலளித்திருந்ததோடு, அணையின் இயக்கம், பராமரிப்பு, செயல்பாடு உள்ளிட்டவை தொடர்பாக தமிழக அரசு தயாரித்து அளித்த rule curve எனப்படும் செயல்பாட்டு விதிமுறை அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.
முல்லை பெரியாறு அணை உறுதியாகவும், பாதுகாப்பானதாகவும் இருப்பதாக, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது. அதனடிப்படையில், அணையில் நவம்பர் 10ஆம் தேதி வரையில் 139 அடி அளவிற்கும், அதற்கு பின் 142 அடி அளவிற்கும் நீரை சேமித்து வைக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

142 அடி உயர்த்த எதிர்ப்பு
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கேரள அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 139 அடியாக உயர்த்துவதற்கே கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அணையை சுற்றியுள்ள இடுக்கி, பத்தினம்திட்டா, கோட்டயம் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால், 3 மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். அணையின் உறுதித்தன்மை தொடர்பான மத்திய அரசின் மேற்பார்வை குழுவின் அறிக்கை, ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என கேரள அரசு கடுமையாக எதிர்த்துள்ளது. அணையில் சேமிக்கும் நீர் மட்டத்தின் அளவை மேலும் குறைக்க வேண்டும் எனவும், நீர் சேமிப்பிற்கான புதிய ரூல் கர்வை உருவாக்கவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

ஆண்டை வைத்து கணக்கிட வேண்டும்
இதனிடையே முல்லை பெரியாறு அணையின் உறுதித்தன்மையை அதன் ஆண்டுகளை வைத்து கணக்கிடகூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அணையின் வயதை வைத்து கணக்கிடாமல் பராமரிப்பு, புதுப்பித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் உறுதித்தன்மையை கணக்கிடவேண்டும் என தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது.

ஏற்க முடியாது
முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரள அரசு தவறான தகவல்களை அளித்து மிகைப்படுத்தி வருகிறது என்று தமிழக அரசு தனது பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது முல்லை பெரியாறு அணை பலவீனமானது என ஐநா அறிக்கை அளித்துள்ளதாக கேரள அரசு கூறுவது தவறானது. முல்லைப் பெரியாறு குறித்து அறிக்கை வெளியிடவில்லை என்றும் முல்லைப் பெரியாறு அணையில் நீரைத் தேக்குவதைக் கைவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு உறுதி
அணைக்கான வயது அல்லது அதன் ஆயுள் காலம் என்பது வரையறுக்கப்படாதது. மழை, வெள்ளத்தை தாங்கி எதுவரை தண்ணீரை சேமித்து வழங்க முடிகிறதோ அதுவரை அணையின் ஆயுட்காலம். அணையின் கட்டுமானம், அடி கட்டமைப்பு பலமாக உள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். இதனால் கேரள அரசின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை புறந்தள்ள வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications