நாட்டையே உலுக்கிய முஸ்லீம் நபர் மீதான வி.எச்.பி கும்பல் தாக்குதல்.. சிறுபான்மையினர் ஆணையம் நோட்டீஸ்
டெல்லி: உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில், பொது இடத்தில் முஸ்லீம் ஒருவரை, ஜெய் ஸ்ரீ ராம் சொல்லச் சொல்லி வற்புறுத்தி மிக மோசமாக தாக்குதல் நடத்திய, சம்பவம் தொடர்பாக, தேசிய சிறுபான்மையினர் ஆணையம், கான்பூர் போலீஸ் கமிஷனருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த புதன்கிழமை, இந்த தாக்குதல் கான்பூரில் நடந்திருந்த நிலையில், இது தொடர்பான பதைபதைக்க வைக்கும் 1 நிமிட காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வந்தன.
அதில், 45 வயது மதிக்கத்தக்க ஒரு இஸ்லாமிய வாலிபரை, பெரிய கும்பல் ஒன்று சூழ்ந்து கொண்டு, ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்ல வற்புறுத்தியதை பார்க்க முடிந்தது. அந்த நபரின் மகள், தனது தந்தையை விட்டு விடுமாறு, கெஞ்சினார், அழுதார். ஆனால், முஸ்லீம் நபரை, அந்த கும்பல் தாக்கியது.

விளக்கம் சொல்லுங்க
இந்த வீடியோ பார்ப்போரை பதை பதைக்க வைப்பதாக இருந்தது. இந்த நிலையில், தேசிய சிறுபான்மையினர் கமிஷன், தானாக முன் வந்து வழக்குப் பதிவு செய்தது. கான்பூர் நகர போலீஸ் கமிஷனருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சிறுபான்மையினர் கமிஷன்.

தானாக முன்வந்து வழக்கு
கான்பூரில் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத் தாக்கியது மற்றும் மதக் கோஷங்களை உச்சரிக்க கட்டாயப்படுத்தியது தொடர்பான அச்சு ஊடகங்களில் வந்த செய்திகளை அடிப்படையாக வைத்து நாங்கள் வழக்குப் பதிவு செய்துள்ளோம். இது முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது.

என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்
அந்த நபரைத் தாக்கிய குற்றவாளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது போன்ற தகவல்களை ஒரு வாரத்திற்குள் அளிக்க வேண்டும். இவ்வாறு சிறுபான்மையினர் ஆணையம் காவல் ஆணையரிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

மத நல்லிணக்கம்
மத நல்லிணக்க சூழலை உருவாக்க எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க என்ன தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை தெரிவிக்க வேண்டும். காவல் துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்விகளும் போலீஸ் கமிஷனருக்கு முன் வைக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர் மகள் நிலைமை
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த, பாதிக்கப்பட்டவரின் மகளுக்கு சட்டம் வழங்கிய உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள கமிஷன், இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மற்றும் இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அந்த மகளின் மன மற்றும் உடல் நிலை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் கேள்வியாக எழுப்பியுள்ளது.

6 பேர் கைது
இந்த கொடுமையான தாக்குதல் தொடர்பாக, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். தாக்குதலுக்கு உள்ளான முஸ்லீம் இ-ரிக்ஷா டிரைவர் என்று விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே கைதானவர்களில் மூன்று பேரை போலீசார் ஒரே நாளில், ஜாமீனில் விடுவித்தனர். வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட மற்ற மூவரும் இன்னும் போலீஸ் காவலில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications