குட்கா துப்ப வேண்டும்..ஜன்னலை திறக்க முடியுமா..? விமானத்தில் ஜாலியாக கேட்கும் பயணி.. கல கல வீடியோ
டெல்லி: குட்கா துப்ப வேண்டும் என்பதால் தயவுது செய்து ஜன்னலை திறந்து விடுமாறு விமான பணிப்பெண்ணிடம் ஜாலியாக பயணி ஒருவர் கேட்கும் வீடியோ இணையத்தில் அதிகம் பரவி வருகிறது. நெட்டிசன்களை ரசிக்க வைக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது
விமான பயணங்களில் சமீப காலமாக அடிக்கடி சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. சமீபத்தில் ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது மதுபோதையில் இருந்த ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் பாதிக்கப்பட்ட பெண் ஏர் இந்தியா நிறுவனத்தின் சேர்மனுக்கு கடிதம் எழுதிய பிறகே வெளிச்சத்துக்கு வந்தது.

இணையத்தில் பரவும் வீடியோ
அதன்பிறகுதான் இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அநாகரீகமாக நடந்து கொண்ட சங்கர் மிஸ்ரா என்பவர் கைது செய்யப்பட்டார். அதைப்போல விமானத்தில் மேலும் சில சர்ச்சைகளும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இப்படி சர்ச்சைகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது விமான பயணத்தின் போது ஜாலியாக நெட்டிசன் ஒருவர் வெளியிட்டு இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் பரவி வருகிறது.

குட்கா துப்ப வேண்டும்
விமான பணிப்பெண்ணிடம் குட்கா மென்றுவிட்டு துப்புவதற்காக ஜன்னலை திறக்க வேண்டும் என பயணி ஒருவர் கேட்கும் காட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளன. மத்திய பிரதேச மாநில இந்தூரை சேர்ந்த கோவிந்த் சர்மா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோவில் ஜன்னல் பக்கம் இல்லாமல் உள்பக்கமாக இருக்கும் இருக்கையில் அமர்ந்து இருக்கும் பயணி ஒருவர் குட்கா போன்று எதையே உள்ளங்கையில் தேய்ப்பது போல் பாவனை செய்கிறார்.

எக்ஸ் கியூஸ் மீ, ஜன்னலை திறக்க முடியுமா
இதன் பிறகு விமான பணிப்பெண்ணை அழைத்து, "எக்ஸ் கியூஸ் மீ..இந்த ஜன்னலை தயவு செய்து திறக்க முடியுமா நான் குட்கா மென்றதை வெளியில் துப்ப வேண்டும்" என்று சிரித்துக் கொண்டே கேட்கிறார். இதைக் கேட்ட விமான பணிப்பெண்ணும் குபீரென்று சிரித்து விடுகிறார். இண்டிகோ விமானத்தில் வைத்து இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகளை பார்த்து சக பயணிகளும் சிரிக்கின்றனர்.

நெட்டிசன்கள் கலகல
இணையத்தில் அதிகம் பரவி வரும் இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியிலும் கல கலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நெட்டிசன்கள் பலரும் ரயில் நிலையத்தில்தான் இப்படி நடக்கிறது என்றால் விமானத்திலுமா..? என கேலியாக பதிவிட்டு இருக்கின்றனர். அதேபோல், சிறுநீர் கழித்த சர்ச்சை மற்றும் சமீபத்தில் தேஜஸ்வி சூர்யா எமெர்ஜென்சி கதவை திறக்க முயற்சித்ததாக வெளியான விவகாரம் போன்ற விவரங்களையும் இந்த வீடியோவிற்கு கீழே பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications