முடிவுக்கு வந்த இடஒதுக்கீடு வழக்கு- ஜன.12-ல் நீட் முதுநிலை மருத்துவ கலந்தாய்வு தொடக்கம்!
டெல்லி: நீட் தேர்வுகள் அடிப்படையிலான முதுநிலை மருத்துவ கலந்தாய்வு வரும் 12-ந் தேதி தொடங்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.
முதுநிலை மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு; உயர்ஜாதி ஏழையினருக்கு 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இவ்வழக்கில் திமுக, தமிழக அரசும் இணைந்திருந்தது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஏன் இடஒதுக்கீடு அவசியம் என்பதை திமுக, தமிழக அரசு தமது வாதத்தில் முன்வைத்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 27% இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என அதிரடியாக தீர்ப்பளித்தது. அத்துடன் நடப்பாண்டில் மட்டும் உயர்ஜாதி ஏழையினருக்கு 10% இடஒதுக்கீடு அமல்படுத்தலாம் என்றும் இந்த 10% இடஒதுக்கீடு தொடர்பாக மார்ச் மாதம் விரிவான தீர்ப்பு வழங்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்தலாம் எனவும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 27% இடஒதுக்கீடு செல்லும் என்கிற தீர்ப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து முதுநிலை மருத்துவ கலந்தாய்வு வரும் 12-ந் தேதி தொடங்கும் என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications