ஒரே நேரத்தில் அச்சுறுத்தும் கொரோனா & நிபா வைரஸ்.. 2-க்கும் என்ன வித்தியாசம்? எது மிகவும் அபாயகரமானது
டெல்லி: கொரோனா வைரஸ் மற்றும் நிபா வைரஸ் என இரண்டு வைரஸ் பாதிப்பும் இப்போது அண்டை மாநிலமான கேரளாவில் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த 2க்கும் என்ன ஒற்றுமை மற்றும் வித்தியாசம் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
Recommended Video
கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகைக்குப் பின்னர், அங்கு கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது. நாட்டின் தினசரி வைரஸ் பாதிப்பு குறையும் நிலையிலும் கூட, கேரளாவில் தினசரி வைரஸ் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
அதேபோல அங்கு இப்போது நிபா வைரஸ் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் நிபா வைரசால் சிறுவன் ஒருவர் உயிரிழந்தார். நல்வாய்ப்பாக அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யாருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை. சரி இப்போது கொரோனா வைரசுக்கும், நிபா வைரசுக்கும் என்ன வித்தியாசம் எனப் பார்க்கலாம்.

Array
நிபா வைரஸ் மனிதர்களில் இருந்து விலங்குகளுக்கு பரவியுள்ளது. கடந்த காலங்களில் பல்வேறு நிகழ்வுகளில் நிபா வைரஸ் விலங்கில் இருந்து மனிதர்களுக்குப் பரவுவது உறுதியாகியுள்ளது. 1999ஆம் ஆண்டு மலேசியாவின் நிபா என்ற கிராமத்தில் முதலில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. பன்றி, பழந்திண்ணி வௌவால், நாய், ஆடு, பூனை, குதிரை ஆகியவை மூலம் நிபா வைரஸ் பரவும்.
ஆனால் அதேநேரம் கொரோனா பாதிப்பு எப்படி மனிதர்களுக்குப் பரவியது என இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. வூஹான் நகரில் முதல் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 20 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அது வூஹான் சந்தையில் இருந்து பரவியதா அல்லது ஆய்வகங்களில் இருந்து பரவியதா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

சிகிச்சை அளிக்கும் முறை
இந்த இரண்டு வைரஸ் பாதிப்புகளுக்கும் இதுவரை முறையான சிகிச்சை முறை கண்டறியப்படவில்லை. இணை சிகிச்சை, நீர்ச்சத்து அதிகரிக்க நடவடிக்கை, அறிகுறிகள் அடிப்படையில் சிகிச்சை ஆகியவையே சிகிச்சையாக அளிக்கப்படுகிறது. அதேபோல monoclonal antibody therapies என்ற சிகிச்சை முறை இப்போது பரிசோதனையில் உள்ளதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியாவிலும் இந்த சிகிச்சை முறை தற்போது சோதனையில் உள்ளது.
கொரோனா வைரசுக்கும் இப்போது வரை அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறை என எதுவும் இல்லை. சில இடங்களில் ரெம்டெசிவிர் மருந்தைக் கொண்டு சிகிச்சை அளிக்கும் முறை பரிசோதனை செய்யப்பட்டது. இருப்பினும், இப்போது வரை கொரோனா வைரசுக்கு எந்தவொரு சிகிச்சை முறையையும் அதிகாரப்பூர்வமாக உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கவில்லை,

R factor என்றால் என்ன
நிபா வைரஸ் மெதுவாகப் பரவும். அதாவது R factor எனப்படும் வைரஸ் பரவும் வேகம் நிபா வைரசுக்கு 0.43ஆக உள்ளது. அதேநேரம் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், அவர்களில் 45 முதல் 70% பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. கேரளாவில் முன்பு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட 19 பேரில் 17 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் இதற்கு நேர்மாறான ஒன்று. அதாவது கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவும் ஆற்றல் கொண்டது. இதன் R factor பல நேரங்களில் ஒன்றைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளது. ஆனால் கொரோனா பெரும்பாலும் லேசான பாதிப்பையே ஏற்படுத்தும். கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே உயிரிழப்பார்கள்.

தடுப்பூசி உள்ளதா?
நிபா வைரஸ் 1999ஆம் ஆண்டு முதல் இருந்தாலும், நிபா வைரசுக்கு எனத் தனியாகத் தடுப்பூசி எதுவும் இல்லை. அவ்வப்போது நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டாலும் கூட, கொரோனா, டெங்கு போல அடிப்படையான பாதிப்பை இது ஏற்படுத்தியதில்லை.
அதேநேரம் கொரோனாவுக்கு மனிதக் குல வரலாற்றிலேயே முதல்முறையாக மிகவும் குறைந்த காலகட்டத்தில் வேக்சின் கண்டறியப்பட்டது. ஸ்புட்னிக் வி, பைசர், மாடர்னா, கோவிஷீல்டு, கோவாக்சின் என பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வேக்சின்கள் கண்டறியப்பட்டுள்ளன.

சர்வதேச பாதிப்பு
கடந்த காலங்களில் மலேசியா, சிங்கப்பூர், வங்கதேசம், இந்தியா ஆகிய நாடுகளில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல கம்போடியா, இந்தோனேசியா, மடகாஸ்கர், தாய்லாந்து மற்றும் திமோர்-லெஸ்டே ஆகிய நாடுகளில் நிபா வைரசால் வௌவால்கள் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
மறுபுறம் கொரோனாவை பொறுத்தவரை இது 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. உலகில் இதுவரை குறைந்தபட்சம் 221,721,579 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அறிகுறிகள்
நிபா வைரசால் பாதிக்கப்படுவோருக்குக் காய்ச்சல், தலைவலி, தசை வலி, வாந்தி மற்றும் தொண்டைப் புண் ஏற்படும். இதைத் தொடர்ந்து தலைச்சுற்றல், மயக்கம், கடுமையான மூளைக்காய்ச்சல் ஆகியவை ஏற்படலாம். சிலருக்கு வித்தியாசமான நிமோனியா மற்றும் கடுமையான சுவாசப் பிரச்சனைகளும் ஏற்படும். சில நாட்களில் நோயாளிகள் கோமா நிலைக்குச் செல்லவும் வாய்ப்புள்ளது.
அதேநேரம் கொரோனா வைரஸ் ஒவ்வொருவரின் உடலிலும் ஒவ்வொரு வகைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சுமார் 80% பேருக்கு லேசான பாதிப்பே ஏற்படுகிறது. குறிப்பிடத்தக்க அளவிலான மக்களுக்கு அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிவதில்லை. காய்ச்சல், இருமல், சோர்வு, வலிகள், வாசனை இழப்பு ஆகியவை முக்கிய அறிகுறிகள் ஆகும்.

கண்டறியும் முறை
கொரோனா வைரஸ், நிபா வைரஸ் என இரண்டு வைரஸ் பாதிப்புகளும் RT-PCR எனப்படும் Reverse transcription polymerase chain reaction என்று பரிசோதனை மூலம் கண்டறியலாம். வைரஸ் பாதிப்பைக் கண்டறிந்து, வைரசால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து, அவர்களைத் தனிமைப்படுத்துவதே சிறந்த முறையாகும்.












Click it and Unblock the Notifications