5ஜி இருக்கட்டும்.. இந்த தமிழக ஊர்களில் செல்போன் டவரே இல்லையாம் - மத்திய அமைச்சரிடம் திமுக எம்பி மனு
டெல்லி: 4ஜியை தொடர்ந்து நாடு முழுவதும் 5ஜி செல்போன் அலைவரிசை சேவையை மத்திய அரசு அறிமுகம் செய்து அது செயல்பாட்டிற்கு வந்து உள்ள நிலையில் தமிழ்நாட்டின் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 13 கிராமங்களுக்கு செல்போன் டவர் கூட இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் திமுக எம்.பி செந்தில்குமார் மத்திய இணை அமைச்சர் அஷ்விணி வைஷ்னவை சந்தித்து பிஎஸ்என்எல் டவர் அமைக்க கோரிக்கை மனு அளித்தார்.
தற்போது உலகின் வளர்ச்சியே தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை கொண்டு அளவிட முடிகிறது. இணையதள வேகம், தொலைதொடர்புத்துறையின் வளர்ச்சி அதிகம் இருக்கும் நாடுகளில் பல தொழில்வாய்ப்புகளும், வேலை வாய்ப்புகளும் உருவாகின்றன.
அப்பகுதியில் வசிக்கும் மக்களின் கற்றல் திறன், வெளியுலக அறிவு அதிகரிக்கின்றன. குறிப்பாக செல்போன் தொழில்நுட்பத்தை எடுத்துக்கொண்டால் உலகம் முழுவதும் கடந்த 20 ஆண்டுகளில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அது வளர்ச்சியடைந்து இருக்கிறது.

5ஜி சேவை
இந்தியாவில் தற்போது வெகுவான மக்களால் 4ஜி சேவை பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே பல வளர்ந்த நாடுகள் 5ஜி சேவையை தொடங்கிவிட்டன. 5ஜி தொழில்நுட்ப செல்போன்களும் சந்தைக்கு வந்துவிட்டன. 5ஜி அலைவரிசையில் 4ஜி அலைவரிசையை விட 10 மடங்கு அதிக வேகத்தில் இணையதள வசதிகளும் 3ஜியை விட 30 மடங்கு அதிக வேகத்தில் இணைய வசதிகளும் கிடைக்கும்.

இந்தியாவில் தொடக்கம்
இந்தியாவில் ஜூலை 26 ஆம் தேதி 5ஜி அலைவரிசைக்கான ஏலம் தொடங்கியது. ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் - ஐடியா, அதானி குழுமம் ஆகிய 4 நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்குபெற்றன. இதில் ஜியோ நிறுவனம் அதிகளவிலான அலைவரிசையை ஏலத்துக்கு எடுத்து உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இந்த 5ஜி சேவையை பிரதமர் மோடி இந்தியாவில் தொடங்கி வைத்தார்.

செல்போன் டவரே இல்லாத கிராமங்கள்
இப்படி இந்தியா ஒருபக்கம் தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடையும் சூழலில் 13 கிராமங்களில் செல்போன் டவரே இல்லை என்ற தகவலை உங்களால் நம்ப முடிகிறதா? நம்ப இயலாவிட்டாலும் அதுதான் உண்மை. நம்ப இயலாவிட்டாலும் அதுதான் உண்மை. ஆம், தருமபுரி தொகுதி திமுக எம்.பி. செந்தில்குமார், இன்று மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவை டெல்லியில் அளித்த கோரிக்கை மனுவின் மூலம் இந்த தகவல் வெளியில் தெரியவந்துள்ளது.

திமுக எம்பி செந்தில்குமார்
அந்த மனுவில் தனது தருமபுரி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் பொதுமக்களின் நலன் கருதி செல்போன் டவர்களை அமைக்க கோரிக்கை மனுவை அளித்து உள்ளார். பிக்கன அள்ளி, மதகிரி, முருகன் குட்டை, ஜம்புது, மாரவாடி, போடறஅள்ளி, பெரும்பாலை, சித்திரைப்பட்டி, செல்லமுடி, ஏரியூர், வாச்சாத்தி, அம்மாபாளையும், ஆவலூர் ஆகிய 13 கிராமங்களில் செல்போன் டவர்கள் இல்லை என்று தன்னுடைய மனுவில் எம்பி செந்தில்குமார் குறிப்பிட்டு உள்ளார்.

மத்திய அமைச்சர்களிடம் மனு
டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் எம்பி செந்தில்குமார், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் சார்ந்தும், பொதுவான விவகாரங்கள் சார்ந்தும் தமிழ்நாடு, தொகுதி சார்பாகவும் பல்வேறு கோரிக்கைகளையும், கருத்துக்களையும் முன்வைத்து வருகிறார். அதேபோல் தனது தொகுதிக்கான கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த மத்திய அமைச்சர்களை சந்தித்து அவர் மனுவாக அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications