ராகுல் காந்தி வீடியோ விவகாரம்.. பிரபல தொகுப்பாளர் ரோஹித் ரஞ்சனை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை!
டெல்லி: ராகுல் காந்தி பேசிய வீடியோவை, தவறாக திரித்து பயன்படுத்திய வழக்கில், பிரபல செய்தி தொகுப்பாளர் ரோஹித் ரஞ்சனை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கேரளாவில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் வயநாடு தொகுதி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து பேசிய ராகுல் காந்தி, "அவர்கள் குழந்தைகள், அவர்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை" என்று குறிப்பிட்டார். இதனிடையே, இஸ்லாமியர்கள் மதம் குறித்து பேசி, சர்ச்சையில் சிக்கி, பெரும் கண்டனத்துக்கு ஆளான நுாபுர் ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவித்ததால், தலை துண்டிக்கப்பட்ட டெய்லர் கன்னையா லால் தொடர்பான நிகழ்ச்சியை தனியார் டிவி சேனல் ஒன்று ஒளிபரப்பியது. அந்த நிகழ்ச்சியை பிரபல செய்தி தொகுப்பாளர் ரோஹித் ரஞ்சன் என்பவர் தொகுத்து வழங்கினார்.

சர்ச்சை என்ன?
அந்த நிகழ்ச்சியில் வயநாடு அலுவலகத்தை தாக்கியவர்கள் குறித்து ராகுல் கூறிய வார்த்தைகள், உதய்பூர் டெய்லர் கன்னையா லாலின் கொலையாளிகள் குறித்து பேசியதாக இணைக்கப்பட்டிருந்தது. ராகுல் சொல்லாததை, சேனல் நிர்வாகம் சொன்னதாக வீடியோ இணைத்து ஒளிபரப்பியது சர்ச்சையானது.

ரோஹித் ரஞ்சன் மீது வழக்கு
இதனைத்தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த செய்தி பொய்யான தகவல். தெரியாமல் தவறு நிகழ்ந்துவிட்டது. அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தொகுப்பாளர் ரோஹித் ரஞ்சன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இருந்தும், இரு தரப்பினர் இடையே வெறுப்புணர்வை துாண்டியதாக காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர், பாஜக ஆளும் உபி உள்ளிட்ட மாநிலங்களில் ரோஹித் ரஞ்சன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஜாமீனில் விடுவிப்பு
பின்னர், சத்தீஸ்கர் மாநில போலீசார், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ரோஹித் ரஞ்சனை கைது செய்ய காசியாபாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டிற்கு வெளியே உத்தரப் பிரதேசம் - சத்தீஸ்கர் மாநில போலீசாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து நொய்டா போலீசாரால் கைது செய்யப்பட்டு, அன்று இரவே அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் மனு
இந்த நிலையில் தன்னை காவல் துறை மீண்டும் கைது செய்ய முயற்சிக்கிறது என உச்சநீதிமன்றத்தில் ரோஹித் ரஞ்சன் மனுதாக்கல் செய்தார். அதில், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரினார். இந்த மனு நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ரோஹித் ரஞ்சன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த், ஒரே குற்றச்சாட்டிற்காக பல மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் மீண்டும் மீண்டும் காவலில் வைக்கப்படுவதால், இந்த விவகாரத்தில் அவசர விசாரணை தேவை. தவறான தகவலை வெளியிட்டதற்காக ஏற்கனவே மன்னிப்புக் கேட்டதாகவும், இருந்தும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது.

கைது செய்ய தடை
இதனைத்தொடர்ந்து ரோஹித் ரஞ்சனை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ரோஹித் ரஞ்சன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டாலும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
