பிப்ரவரியில் தடுப்பூசி... மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு... செவிலியர் அதிர்ச்சி
டெல்லி: கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுத்துக்கொண்ட செவிலியருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா போன்ற மாநிலங்களில் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.

இதனால் அனைத்து மாநிலங்களையும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக மேற்கொள்ளப்படும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஜனவரி 16ஆம் தேதி சுகாதார ஊழியர்கள் உட்பட முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெறுகிறது.
அதன்படி டெல்லியிலுள்ள சத்யவாடி ராஜா ஹரிஷ் சந்திரா அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் ஒருவர் பிப்ரவரி மாதம் 21 நாட்கள் இடைவெளியில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டார்.
இந்நிலையில், நேற்று வழக்கம் போல பணியிலிருந்தார். அப்போது, திடீரென்று அவருக்கு உடல் வலியும் வேர்வையும் அதிகரித்துள்ளது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின்னரும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது எதிர்பார்த்துத்தான் என்றும் இதனால் அதிர்ச்சியடையத் தேவையில்லை என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். எந்த நோய்க்கும் எந்தத் தடுப்பூசியும் 100 சதவிகிதம் பலன் அளிக்காது என்றும் இதனால் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின்னரும் சிலருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படுவது இயல்பு தான் என்றும் எய்ம்ஸ் முன்னாள் மருத்துவர் டாக்டர் ஜி.சி. கில்னானி தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின்னர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும்கூட அதன் தீவிர தன்மை குறைவாகவே இருக்கும் என்றும் இதன் மூலம் உயிரிழப்புகளைப் பெருவாரியாகக் கட்டுப்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.