"கடவுளே! தயவுசெய்து வேண்டாம்" - சோனியா காந்தி பற்றி கேள்வி! உடனே பதிலளித்த நளினி கொடுத்த ரியாக்சன்
டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 32 ஆண்டுகளுக்கு பின் நேற்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட நளினியிடம் சோனியா காந்தியை சந்திப்பீர்களா என செய்தியாளர் கேட்டதற்கு, "கடவுளே! தயவுசெய்து வேண்டாம்" என்று பதிலளித்து உள்ளார்.
கடந்த 1991 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கொலையாளிகளுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக கூறி 1991 ஆம் ஆண்டு கைதானார் பேரறிவாளன். அவருடன் சாந்தன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூக்கு தண்டனை
கைதான 7 பேருக்கும் சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கிய நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டார். தொடர்ந்து பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்பட்டு வந்தது.

பேரறிவாளன் விடுதலை
இந்த நிலையில் பேரறிவாளன் விடுதலை கோரிய வழக்கை கடந்த மே மாதம் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு அவரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு அதிகாரத்தில் விடுதலை
- இந்த நிலையில் உச்சநீதிமன்றம் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நேற்று முந்தினம் அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நளினி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

பேட்டி
32 ஆண்டுகளுக்கு பிறகு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நளினி தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "32 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டும் எனக்கு நிம்மதி இல்லை. என்னுடைய கணவர் 20 வயதில் சிறைக்கு சென்றார். 32 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் அவர் வெளியே வருகிறார்.

ஜெயலலிதாவுக்கு நன்றி
பிரிட்டனில் உள்ள தனது மகளிடம் அவரை அனுப்ப நான் வேண்டுகிறேன். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர்தான் இதனை முதலில் தொடங்கி வைத்தவர். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நான் நன்றிக்கடன் பட்டு உள்ளேன்.

முக ஸ்டாலினுக்கு நன்றி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும் நான் நன்றிக்கடன்பட்டு இருக்கிறேன். அவர்கள் எங்களுக்கு பரோல் வழங்கி உதவினார்கள். அதனாலே எங்களால் இந்த வழக்கை எடுத்து அடுத்தக்கட்டத்துக்கு நடத்த முயன்றது." என்றார். தன்னுடைய விடுதலையை எதிர்ப்பவர்களின் நிலைபாட்டை தவறு என்று தன்னால் விமர்சிக்க முடியாது எனவும் அவர் கூறினார்.

சோனியாவை சந்திப்பீர்களா?
அப்போது செய்தியாளர் ஒருவர் நளினியிடம், காங்கிரஸ் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவியுமான சோனியா காந்தியை சந்திப்பீர்களா?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நளினி, "கடவுளே! தயவுசெய்து வேண்டாம்" என்று கூறினார்.

சந்திக்க மாட்டேன்
மற்றொரு தனியார் தொலைக்காட்சிக்கு நளினி அளித்த பிரத்யேக பேட்டியில், இதே கேள்வி எழுப்பப்பட்டபோது "இது கற்பனையாக கேள்வி. அவர்கள் என்னை அழைக்கப்போவதும் இல்லை. நான் அவர்களை சந்திக்கப்போவதும் இல்லை." என்றார். கடந்த 2000 ஆம் ஆண்டு நளினியை மன்னிப்பதாக சோனியா காந்தி தெரிவித்த பிறகே அவரது கருணை மனு ஏற்கப்பட்டது தண்டனை குறைக்கப்பட காரணமாக அமைந்தது.












Click it and Unblock the Notifications