அதிமுக வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் கோரிக்கை ஏற்பு.. எடப்பாடி பழனிசாமி மனு நிராகரிப்பு
டெல்லி: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை தள்ளி வைக்கக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. வழக்கு ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11 ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் பொதுச்செயலாளர் தேர்தலும் அறிவிக்கப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஜூலை 11 ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும். பொதுச்செயலாளர் தேர்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.குமரேஷ்பாபு கடந்த மார்ச் 28-ந் தேதி உத்தரவிட்டார்.
அவரது தீர்ப்பில், பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளதால், 2,460 பொதுக்குழு உறுப்பினர்களும் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்களும் செல்லுபடியாகக்கூடியவையே என தெளிவுபடுத்தினார். அந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வு முன்பு மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்

அந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வு, பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது. அவ்வாறு தடை விதித்தால், அது தீர்மானங்களை செல்லாது என அறிவிக்க கோரிய பிரதான வழக்கில் நிவாரணம் வழங்கியதாகிவிடும் .. எனவே அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என ஆகஸ்ட் 25-ந் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் சார்பில் வக்கீல் கவுதம் சிவசங்கர் அக்டோபர் 5-ந் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரிக்கப்பட இருந்தது. இந்தநிலையில இந்த மனு மீதான விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்க கோரி ஓ.பன்னீர்செல்வத்தின் சார்பில் கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டிருக்கிறது..
இதற்கு ஆட்சேபம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த மனுவில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துவிட்டு, சிவில் கோர்ட்டில் நடைபெறும் வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதற்கு வசதியாக விசாரணையை தள்ளிவைக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்கக்கூடாது என்று கூறியிருந்தார். இந்நிலையில் வழக்கை ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டும் என்ற ஓ பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை நிராகரித்துவிட்டு வழக்கை ஒரு வாரம் தள்ளி வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications