"சனாதன தர்மம்" பின்பற்றுபவர்கள் மட்டுமே நாட்டில் இருந்திருக்க வேண்டும்..பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங்
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு சனாதனதர்மத்தை ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமே நாட்டில் இருப்பதை உறுதி செய்து இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங். தனது ஆவேசமான பேச்சுக்களால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வதை வாடிக்கையாக கொண்டவர்.
அந்த வகையில் தற்போது கிரிராஜ் சிங் வெளிப்படுத்தியுள்ள ஒரு கருத்து பேசுபொருளாகியுள்ளது.

மதத்தின் பெயரால் தேசம் பிரிக்கப்பட்டது
தனது மக்களவை தொகுதியான பெகுசராயில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த கிரிராஜ் சிங் கூறியதாவது:- "மதத்தின் பெயரால் இந்த தேசம் பிரிக்கப்பட்டது. அப்போது சனாதன தர்மத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே இந்த நாட்டில் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்திருக்க வேண்டும். அப்படி செய்து இருந்தால் பத்ருதின் மற்றும் ஓவைசி போன்றவர்களின் இழிவான கருத்துக்களை நாம் கேட்டு இருக்க மாட்டோம்" என்றார்.

நமது அண்டை நாடான சீனா...
நாட்டில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ள கிரிராஜ் சிங், "பதுருதினும் அவரது குழுவினரும் சீனாவிற்கு எதிராக பேச வேண்டும். சீனாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் அமலில் இருந்தது. நமது அண்டை நாடான சீனா 1980 களில் நம்மை விட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) பின் தங்கியிருந்தது. ஆனால், அவர்கள் இன்று எந்த உயரத்தை எட்டியிருக்கிறார்கள் என்று பாருங்கள்.

யாருக்கும் விதிவிலக்கு அளிக்கவில்லை
சீனாவில் கொண்டு வரப்பட்ட மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டத்தில் யாருக்கும் விதிவிலக்கு அளிக்கவில்லை. முஸ்லீம்களுக்கும் சேர்த்தே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. உலக மக்கள் தொகையில் 20 சதவீதம் நமது நாட்டில்தான் இருக்கிறது. அதேவேளையில் உலகின் மொத்த பரப்பளவில் வெறும் 2.5 சதவீதம் மட்டுமே நமது நாடு கொண்டுள்ளது. கடுமையான மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டங்கள் கொண்டு வராமல் நிலையானபொருளாதார வளர்ச்சியை நம்மால் அடைய முடியாது" என்றார்.

இளம் வயதில் திருமணம் செய்கின்றனர்
முன்னதாக மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பாஜக தலைவர்கள் பேசி வருவது தொடர்பாக பேசிய அசாம் மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமிய தலைவரும் எம்.பியுமான பத்ரூதீன் அஜ்மல் கூறிய கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில்தான் மத்திய அமைச்சர் கிரிராஜ் மேற்கண்டவாறு பேசியுள்ளார். பத்ரூதின் பேசும் போது, இஸ்லாமியர்கள் இளம் வயதில் திருமணம் செய்து கொள்கின்றனர்.

இந்துக்கள் சரியான வயதில்..
இதனால், அவர்களால் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால், இந்துக்கள் சரியான வயதில் திருமணம் செய்யாததால் சட்டத்திற்கு புறம்பான தொடர்புகளை வைத்துக்கொள்கின்றனர். 40-வயதிற்கு பிறகு பெற்றோரின் அழுத்தம் காரணமாக திருமணம் செய்கின்றனர். வளமான நிலத்தில் விதைத்தால் மட்டுமே நல்ல விளைச்சல் கிடைக்கும். எனவே இந்துக்களும் இஸ்லாமியர்கள் பின்பற்றும் நடைமுறையை பின்பற்ற வேண்டும். அப்படி செய்தால் இந்து சமூகத்திலும் மக்கள் தொகை அதிகரிக்கும்" என்றார். இவரது பேச்சு கடும் விமர்சனங்களை சந்தித்த நிலையில், கிரிராஜ்சிங் மேற்கண்டவாறு பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications