ஊழல், வாரிசு, சமரச அரசியல்.. "மூன்று பாவங்களை" ஒழிக்க வேண்டும்.. செங்கோட்டையில் கர்ஜித்த மோடி
டெல்லி: நாட்டில் ஊழல், வாரிசு அரசியல், சமரச அரசியல் எனப்படும் மூன்று பாவங்களை நாட்டை விட்டே ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் 77வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த நாளில் பிரதமர் டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி வைத்து உரையாற்றினார்.
நாடு சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் முடிந்து விட்டன. கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியின் சாதனைகளை படிப்படியாக பட்டியலிட்டு பிரதமர் மோடி இன்று உரையாற்றப்போகிறார். வரும் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மிக முக்கியமான அறிவிப்புகளை பிரதமர் மோடி வெளியிடுவார்.

2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த முதலாம் ஆண்டில் டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிய பிரதமர் மோடி தன்னை ஒரு பிரதான சேவகர் அதாவது தலைமை சேவகர் என்று அறிவித்தார். ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தை குறிப்பிட்டார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேக் இன் இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்தார்.
2015ஆம் ஆண்டு "ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா" என்ற முழக்கத்தை முன் வைத்தார். ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் கொள்கையில் ஒப்புதல் உள்ளிட்ட அரசின் சாதனைகள் மற்றும் வாக்குறுதிகளை அவர் எடுத்துரைத்தார். ஜன்தன் யோஜனா முன்னேற்றம், கறுப்புப் பணம், ஊழல் ஒழிப்பு ஆகியவை குறித்து பேசினார்.
2016 ஆம் ஆண்டு மோடி தனது மூன்றாவது சுதந்திர தின உரையில் பலுசிஸ்தானில் மனித உரிமை மீறல்களை கடுமையாக கண்டித்தார். இது ஒரு அரசியல் சதி என்று கூறப்பட்டது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் கவனத்தை செலுத்துவதற்கான பதிலடியாக இது பார்க்கப்பட்டது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாடு மற்றும் புர்ஹான் வானி போன்ற பயங்கரவாதிகளை கொச்சைப்படுத்துவதையும் பிரதமர் விமர்சித்தார்.
2017 ஆம் ஆண்டு நாடு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75 ஆண்டுகளையும், சம்பாரன் சத்தியாகிரகத்தின் 100வது ஆண்டு நிறைவையும் கொண்டாடும் வேளையில், 'புதிய இந்தியாவை' உருவாக்க இந்தியர்கள் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். அடுத்த ஐந்து ஆண்டுகள், 2017 முதல் 2022 வரை நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியமானது என்று மோடி கூறினார்.
2018 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி ஆயுஷ்மான் பாரத் அல்லது தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஆயுஷ்மான் பாரத் திட்டம் பத்து கோடி குடும்பங்கள் அல்லது 50 கோடி இந்தியர்களுக்கு உதவும் என்று பிரதமர் மோடி கூறினார். இந்தியாவின் ஏழைகளுக்கு நல்ல தரமான மற்றும் மலிவு விலையில் மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய நேரம் இது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
2019 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று சேவைகளின் தலைவராக பாதுகாப்புப் படைகளின் தலைவர் இருப்பார் என்று கூறினார். இந்தியாவிற்கு ஒரு தலைமை பாதுகாப்புப் படை - சிடிஎஸ் இருக்கும். இது படைகளை மேலும் திறம்படச் செய்யும் என்று பிரதமர் மோடி கூறினார்
2020 ஆம் ஆண்டு 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி 'மேக் ஃபார் வேர்ல்ட்' என்ற மந்திரத்தை முன்வைத்தார். 'உள்ளூருக்கான குரல்' என்ற கருத்தையும் அவர் ஊக்குவித்தார். "சுதந்திர இந்தியாவின் மனநிலை 'உள்ளூர் மக்களுக்காக' குரல் கொடுக்க வேண்டும். எங்கள் உள்ளூர் தயாரிப்புகளை நாம் பாராட்ட வேண்டும், இதைச் செய்யாவிட்டால், எங்கள் தயாரிப்புகள் சிறப்பாகச் செயல்படுவதற்கான வாய்ப்பைப் பெறாது, மேலும் ஊக்குவிக்கப்படாது என்று பிரதமர் மோடி கூறினார். 2020 ஆம் ஆண்டு உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கியிருந்த போது பிரதமர் மோடி இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.
2021ஆம் ஆண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்து பேசிய பிரதமர் மோடி, இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டைக் குறிக்கும் மற்றும் அதை நினைவுகூரும் வகையில், பிரதமர் மோடி சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவை 75 வாரங்களுக்கு கொண்டாடுவதாக அறிவித்தார். நாட்டின் ஒவ்வொரு மூலையையும் இணைக்கும் வகையில் 75 வந்தே பாரத் ரயில்களை தனது அரசாங்கம் வழங்கும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார் . இது தவிர, செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம், பெண்களுக்கான சைனிக் பள்ளி, தேசிய ஹைட்ரஜன் மிஷன் ஆகியவற்றை பிரதமர் அறிவித்தார்.
2022 ஆம் ஆண்டு நாம் பஞ்ச் பிரான் பற்றி பேசிய மோடி 5ஜி மொபைல் தொழில்நுட்பம் விரைவில் இந்தியாவில் கிடைக்கும் என்றும் அவர் அறிவித்தார்.
சுதந்திரம் பெற்ற 76வது ஆண்டில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை 2047க்குள் நிறைவேற்ற 5 உறுதிமொழிகளுடன் முன்னேற வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார், அதை 'பஞ்ச் பிரான்' என்று குறிப்பிட்டார்.
2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியான இன்று பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது மோடி, வரும் 2047ஆம் ஆண்டில் நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, நாடு வளர்ந்த இந்தியாவாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனது நாட்டின் திறன் மற்றும் கிடைக்கும் வளங்களின் அடிப்படையில் இதைச் சொல்கிறேன். ஆனால், ஊழல், வாரிசு அரசியல், கொள்கைளில் சமரசம் ஆகிய மூன்று தீமைகளை எதிர்த்துப் போராடுவது இப்போதைய தேவை. ஊழல் இந்தியாவின் திறனை மோசமாக பாதித்துள்ளது; ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டும் என்பது மோடியின் வாழ்நாள் அர்ப்பணிப்பு என்று கர்ஜித்தார்.
2019ஆம் ஆண்டில், செயல்திறன் அடிப்படையில், நீங்கள் என்னை மீண்டும் ஒருமுறை ஆசீர்வதித்தீர்கள். அடுத்த ஐந்து ஆண்டுகள் முன்னோடியில்லாத வளர்ச்சிக்கானது. 2047ஆம் ஆண்டின் கனவை நனவாக்கும் மிகப் பெரிய பொன்னான தருணம் வரும் ஐந்தாண்டுகள். அடுத்த முறை ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த செங்கோட்டையில் இருந்து நாட்டின் சாதனைகள் மற்றும் வளர்ச்சிகளை உங்கள் முன் வைப்பேன் என்றும் உறுதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications