ஒரு முதல்வரை ஆளுநர் கண்காணிக்க முடியாது.. உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு சொன்ன முக்கிய பாயிண்டு
டெல்லி: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு நிர்ணயம் செய்திருந்தது. இது குறித்து ஜனாதிபதி திரௌபதி முர்மு அளித்திருந்த 14 கேள்விகளைக் கொண்ட ஒரு விளக்கக் குறிப்பைத் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது முதல்வரின் செயல்பாடுகளை ஒரு ஆளுநரால் கண்காணிக்க முடியாது எனக் கர்நாடக அரசு வாதத்தை முன்வைத்தது.
தமிழ்நாட்டில் அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்துவதாகச் சொல்லி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்த வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்குக் காலக்கெடு நிர்ணயம் செய்தது.

உச்ச நீதிமன்றம்
இது அப்போது மிகப் பெரியளவில் பேசுபொருளான நிலையில், இது தொடர்பாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்விகளைக் கொண்ட விளக்கக்குறிப்பை அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இது விளக்கக் குறிப்பு தொடர்பான விசாரணை மட்டுமே என்றும் இது முந்தைய உத்தரவுகளை மாற்றாது என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியிருந்தது.
இந்த வழக்கில் முதலில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. முதலில் மத்திய அரசு தனது சார்பில் பல முக்கிய வாதங்களை முன்வைத்தது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலங்களும் தங்கள் வாதத்தை முன்வைத்து வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்கள் காலக்கெடு விதிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் சூழலில், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் காலக்கெடு சரியானது என சொல்லி வருகிறது.
இன்று மீண்டும் விசாரணை
இந்தச் சூழலில் தான் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது. இந்த வழக்கில் கர்நாடகா அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் சில முக்கிய வாதங்களை முன்வைத்தார்.
மக்களிடமே முழுமையான இறையாண்மை உள்ளதாகத் தெரிவித்த கோபால் சுப்பிரமணியம் மேலும் கூறுகையில், "ஜனநாயகம் என்பது மக்களின் கூட்டு வெளிப்பாடு.. இது சட்டமன்றத்தின் மூலம் வெளிப்படுகிறது. சட்டமன்றத்திலிருந்து தான் உருவானது தான் நிர்வாகம்.. மேலும், அது சட்டமன்றத்திற்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளது. மக்களின் ஒப்புதல் இல்லாமல் அரசு இயங்க முடியாது. சட்டமியற்றும் இறுதி பொறுப்பு அரசுக்கே உள்ளது.
பெரயளவிலான தலைவர்கள் மட்டுமே
குடியரசுத் தலைவரும், ஆளுநரும் பெயரளவிலான தலைவர்கள் மட்டுமே. அவர்கள் அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைக்குக் கட்டுப்பட்டவர்கள். இதுதான் இந்தியாவின் நிர்வாகத்தின் அடிப்படையாகும். இதை உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநரின் செயல்பாடுகள் என்பது தன்னிச்சையானதாக இருக்க முடியாது. அமைச்சரவை ஆலோசனைக்கு இணங்கவே இருக்க வேண்டும். ஆளுநர் தனது இஷ்டப்படி செயல்பட்டால் தேர்தல் என்பதே பயனற்றதாகிவிடும்.. இரட்டை ஆட்சி அதிகாரம் போன்ற ஒரு சூழல் உருவாகும்" என்றார்.
மேலும், நபாம் ரெபியா வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பையும் கோபால் சுப்ரமணியம் சுட்டிக்காட்டினார். அதில் ஒரு மாநில நிர்வாகம் மற்றும் சட்டமன்றத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் அதிகாரங்களை ஆளுநர் எடுத்துக்கொள்ள அனுமதிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
மேற்பார்வையிட முடியாது
பிரதமரையோ அல்லது முதல்வரையோ மேற்பார்வையிடும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கும் ஆளுநர்களுக்கும் உண்டு என்ற மத்திய அரசின் வாதங்களை கோபால் சுப்ரமணியம் மறுத்தார். அரசியலமைப்பின் 74-வது பிரிவின் கீழ், அமைச்சரவையின் மறுபரிசீலனை செய்யப்பட்ட முடிவை குடியரசுத் தலைவர் கட்டாயமாக அங்கீகரிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், 143வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு பரிந்துரையை அனுப்புவதும் குடியரசுத் தலைவரின் தனிப்பட்ட விருப்பமல்ல.. மாறாக அமைச்சரவையின் விருப்பம் என்றும் அவர் கூறினார்.
குடியரசுத் தலைவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் பிரதமரையோ, பிற அமைச்சர்களையோ பதவி நீக்கம் செய்யவோ, மக்களவையைக் கலைக்கவோ முடியாது என்று கோபால் சுப்ரமணியம் திட்டவட்டமாகக் கூறினார். குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் குறித்த மத்திய அரசின் முந்தைய வாதங்களை அவர் உறுதியாக நிராகரித்தார். மேலும், ஒரு மசோதா ஒப்புதல் கிடைக்காமல் நிறுத்தி வைக்கப்படக் கூடாது என்ற அவர், ஒப்புதல் என்பது உடனடியாகவும் விரைவாகவும் வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு அரசு
முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழ்நாடு அரசு சார்பில் சில முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டது.. ஆளுநர் என்பவர் அதிகாரம் கொண்டவர் இல்லை என்றும் சூப்பர் சிஎம் இல்லை என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இதனால் ஒரு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்க அல்லது மசோதாவை நிராகரிக்க முடியாது என்றும் தமிழக அரசு கூறியது. மசோதாக்களில் பிரச்சினை என்றால் அதை நீதிமன்றமே ஆராயும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு
அதேநேரம் மத்திய அரசு வேறு வாதங்களை முன்வைத்தது. ஆளுநர் என்பவர் போஸ்ட் மாஸ்டர் இல்லை என்றும் மத்திய அரசின் ஏஜெண்டு என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஒரு மசோதாவை மாநில அரசு எத்தனை முறை அனுப்பினால் அதை நிறுத்தி வைக்க அல்லது நிராகரிக்க ஆளுநருக்கு உரிமை இருக்கிறது என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது.











Click it and Unblock the Notifications