டெல்லி மெட்ரோவில் இன்ப அதிர்ச்சி.. திரும்பி பார்த்தால் பக்கத்தில் பிரதமர் மோடி! நெகிழ்ந்த மாணவர்கள்
டெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மெட்ரோ ரயிலில் பயணம் செய்திருக்கிறார்.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரே, உருவாக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் சுதந்திரத்திற்கான விதை பரவலாக தூவப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தில் பயின்ற பெரும்பாலான மாணவர்கள் விடுதலை போராட்ட வீரர்களாகவும், அரசியல் தலைவர்களாகவும் உருவெடுத்தனர். இந்த அளவுக்கு சிறப்புமிக்க இப்பல்கலைக்கழகம் தற்போது தனது 100வது ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதனை பல்கலை. நிர்வாகம் சிறப்பாக கொண்டாடி வருகிறது.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார். இன்று காலை பல்கலைக்கழகத்திற்கு புறப்பட்ட பிரதமர், மெட்ரோ ரயிலில் பயணம் செய்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பயணத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் மோடி கலந்துரையாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பரவி வருகிறது.

முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்திக்கு பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் மூன்றாவது பிரதமர் என்கிற பெருமையை நரேந்திர மோடி பெற்றிருக்கிறார். இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் கூடுதல் கட்டிடங்களையும் மாணவர்கள் பயன்பாட்டிற்கு பிரதமர் திறந்து வைக்கிறார்.
பிரதமரின் வருகையை ஆசிரியர் சங்கத்தினர், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி மாணவர் அமைப்புகள் சில புறக்கணித்துள்ளன. பிரதமரின் உரை மற்றும் அவர் அடிக்கல் நாட்டு நிகழ்வு அனைத்தும் காணொலி வாயிலாக ஒளிபரப்பப்பட்டன. தங்களுடன் பிரதமர் மோடி மெட்ரோ பயணம் மேற்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும், பொதுப் போக்குவரத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும் அவருடன் பயணித்த மாணவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "கடந்த 2014ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியப் பல்கலைக் கழகங்களின் உலகளாவிய அங்கீகாரம் அதிகரித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் ஆண்டுதோறும் வெளியிடும் பல்கலைக்கழக தரவரியைில் வெறும் 12 இந்திய பல்கலைக்கழகங்கள் மட்டுமே இடம் பிடித்திருந்தது. ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து உழைத்து வருகிறோம்.
காங்கிரஸ் ஆட்சியில், அதாவது 2014ம் ஆண்டுக்கு முன்னர் நாடு முழுவதும் வெறும் 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்தான் இருந்தன. ஆனால் இன்று அதன் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்திருக்கிறது. 20ம் நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தம் (1930) சுதந்திர இயக்கத்திற்கு ஒரு புதிய வேகத்தை அளித்தது. அதேபோல இந்த 21ம் நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தம் (2030) நமது தேசத்தின் வளர்ச்சிப் பயணத்திற்கு ஒரு புதிய வேகத்தைத் தரும்.
கடந்த சில ஆண்டுகளாக தேசிய அளவில் ஐஐடி, ஐஐஎம், என்ஐடி மற்றும் எய்ம்ஸ் கல்லூரிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதுவே இந்த வளர்ச்சியின் வெளிப்பாடுதான்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications