கடும் கோபத்தில் ராகுல் காந்தி.. "ஒரு இடத்தில் கூட ஜெயிக்க முடியல.. என்ன தான் பண்றீங்க.." ஆவேசம்
டெல்லி: சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி மாணவர் சங்க தேர்தலில் காங்கிரஸ் மாணவர் அமைப்பு வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அதில் 4ல் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் வெல்லவில்லை. இதன் காரணமாக ராகுல் காந்தி கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் மாணவர் சங்க தலைவர்களை நேரில் அழைத்து விளக்கம் கேட்டதாகவும் தகவல் வெளியானது.
டெல்லி பல்கலைக்கழகத்தின் மத்திய மாணவர் அமைப்பில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர் என 4 முக்கிய பதவிகளுக்கு நடத்தப்படும் தேர்தல் தான் டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல். சமீபத்தில் நடந்து முடிந்த மாணவர் சங்க தேர்தலில் காங்கிரஸின் மாணவர் அமைப்புக்கு எந்தவொரு பதவியும் கிடைக்கவில்லை.

தேர்தல் முடிவு
இந்த தேர்தலில் ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற ஏபிவிபி அமைப்பு 4ல் 3 பதவிகளை கைப்பற்றியது. தலைவர், செயலாளர் மற்றும் இணைச் செயலாளர் ஆகிய 3 பதவிகளையும் ஏபிவிபி கைப்பற்றியது. துணைத் தலைவர் பதவியை மட்டும் முன்னாள் காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் உறுப்பினரான தீபான்ஷு ஷோகீன் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றார். அதாவது 4ல் ஒரு பதவி கூட காங்கிரஸ் மாணவர் அமைப்புக்கு கிடைக்கவில்லை. குறிப்பாக துணை தலைவர் மற்றும் இணை செயலாளர் ரேஸில் 3வது இடத்திலும் தள்ளப்பட்டது.
காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, அவர்கள் இந்த தேர்தல் வெறும் மாணவர் தேர்தலாக பார்க்கப்படவில்லை. சமீப காலமாகவே இளைஞர்களின் போராட்டங்களும் இளைஞர்கள் இயக்கமுமே நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில், இளைஞர்களிடம் காங்கிரஸ் எந்தளவுக்கு சென்றடைந்துள்ளது என்பதை சோதிக்கும் ஒரு தேர்தலாகவே பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த முடிவு கிடைக்காத நிலையில், இந்த தேர்தல் முடிவு காங்கிரஸில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை காங்கிரஸ் மாணவர் அமைப்பு பொறுப்பாளரான கன்னையா குமார் மற்றும் தேசிய தலைவர் வினோத் ஜக்கரை நேரில் சந்தித்து சங்க தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் அமைப்பு பொது செயலாளர் கே.சி. வேணுகோபாலும் இந்த கூட்டத்தில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
வெல்ல முடியவில்லை
தலைவர் பதவியை வெல்வதற்கு காங்கிரஸ் வேட்பாளர் கடும் போட்டி கொடுத்த நிலையில், இறுதியில் 4 பதவிகளில் ஒன்றைக்கூட ஏன் கைப்பற்ற முடியவில்லை என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. தேர்தல் மேலாண்மை, வேட்பாளர் தேர்வு, பிரச்சார உத்தி உள்ளிட்டவை குறித்து கன்னையா குமார் மற்றும் வினோத் ஜக்கரிடம் விரிவான விளக்கம் கேட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யார் போட்டியிட வேண்டும் என முடிவு செய்வதில் கன்னையா குமார் பொறுப்பு எடுத்திருந்த நிலையில், எதிர்பார்ப்புக்கும் தேர்தல் முடிவுக்கும் இடையே இவ்வளவு பெரிய வித்தியாசம் ஏற்பட்டது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னணி
இந்த ஆலோசனையில் தீபான்ஷு ஷோகீன் விவகாரமும் முக்கியமாக எழுந்ததாக கூறப்படுகிறது. 2023ம் ஆண்டு முதலே மாணவர் அரசியலில் செயல்பட்டு வந்த ஷோகீன், 2023 மற்றும் 2024 தேர்தல்களில் காங்கிரஸ் மாணவர் அமைப்புக்காக பிரச்சாரம் செய்திருந்தார். 2025 டெல்லி பல்கலைக்கழக தேர்தலிலும் காங்கிரஸ் மாணவர் அமைப்பு சார்பில் போட்டியிட அவர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டதாகவும், ஆனால் வாய்ப்பு வழங்கப்படாததால் சுயேட்சையாக களமிறங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதியில் அவர் துணைத் தலைவர் பதவியில் வெற்றி பெற்றார்.
ஷோகீன் விவகாரம்
ஷோகீனை ஏன் காங்கிரஸ் மாணவர் அமைப்பு சார்பில் வேட்பாளராக களமிறக்கவில்லை என்று கன்னையா குமார் மற்றும் வினோத் ஜக்கரிடம் ராகுல் காந்தி கேட்டதாக கூறப்படுகிறது. ஷோகீன் முன்வைத்த சில நிபந்தனைகள் ஏற்க முடியாத வகையில் இருந்ததாக இரு தலைவர்களும் விளக்கம் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த விவகாரம் கையாளப்பட்ட விதத்தில் ராகுல் காந்தி திருப்தி அடையவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் அமிதாப் துபே இந்த விளக்கத்தை மறுத்துள்ளார். ஷோகீனுக்கு தலைவர் பதவிக்கான டிக்கெட் வழங்கப்பட்டதாகவும், அதை அவர் நிராகரித்த பின்னரே துணை தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முயற்சி
காங்கிரஸ் கட்சியை இளைஞர்களிடம் மீண்டும் அழைத்து செல்ல காங்கிரஸ் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ராகுல் காந்தியும் இளைஞர்களை கவரும் வகையில் கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்த நேரத்தில்தான் டெல்லி மாணவர் சங்க தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது. அதில் காங்கிரஸ் மாணவர் அமைப்பு ஒரு பதவியைக்கூட வெல்லாதது, காங்கிரஸின் அணுகுமுறை களத்தில் வேலை செய்யவில்லையே என்ற கேள்வியை எழுப்புகிறது.
நாடு முழுவதும் Gen-Z இளைஞர்கள் பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த தேர்தல் முடிவு காங்கிரஸ் தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர் அமைப்பை மாற்றவும் கூட பரிசீலனை செய்யும் சூழல் உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications
