ஓய்வுபெற்று 5 மாதம் கழித்து தீர்ப்பு வழங்குவதா? சென்னை ஐகோர்ட் நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மதிவாணன் ஓய்வுபெற்று 5 மாதங்கள் கழித்து வழக்கின் விரிவான தீர்ப்பை வழங்கியதை உச்சநீதிமன்றம் கண்டித்து இருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தவர் டி மதிவாணன். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி பணியில் இருந்து ஓய்வுபெற்றார். இந்த நிலையில் விசாரித்து வந்த வழக்கு ஒன்றின் விரிவான தீர்ப்பு அதே ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு நீதிபதிகள் அபய் ஓகா, உஜ்ஜால் புயன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி குற்ற வழக்கு தொடர்பாக ஒரே வரியில் உத்தரவு பிறப்பித்து பணியில் இருந்து ஓய்வுபெற்று 5 மாதங்கள் கடந்த பின்னர் விரிவான தீர்ப்பை வழங்கி இருப்பதை கண்டித்து உள்ளனர். முன்னாள் நீதிபதி ஓய்வுபெற்ற பிறகு வழக்கின் கோப்பை ஐந்து மாதங்களுக்கு தன் வசம் வைத்து இருப்பதே மிகப்பெரிய முறைகேடான செயல் என்று உச்ச நீதிமன்றம் கடிந்து இருக்கிறது. நீதிபதி ஓய்வுபெற்ற நாளில் இருந்து நீதிமன்ற அறிக்கை வெளியிட ஐந்து வாரங்கள் வரை நீதிபதிக்கு அவகாசம் இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து உச்சநீதிமன்றம் தெரிவிக்கையில், "5 வாரங்கள் அவகாசம் இருந்தும், 250 பக்கங்களுக்கும் அதிகமான விரிவான தீர்ப்பை நீதிபதி பதவி விலகி 5 மாதங்கள் கழித்து வெளியிட்டு இருக்கிறார். இதன் மூலம், நீதிபதி ஓய்வுபெற்ற பிறகும், தனக்கென சில காரணங்களை வைத்துக்கொண்டு இந்த தீர்ப்பை தயார் செய்திருப்பது தெளிவாகிறது. ஒரு நீதிபதி பதவி விலகிய பிறகு 5 மாத காலம் வழக்கின் கோப்பை வைத்திருப்பது முறைகேடான ஒன்றாகும். இதை எங்களால் அனுமதிக்க முடியாது.
நீதி கிடைக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, நீதி கிடைப்பது தெரியவும் வேண்டும்" என லார்ட் ஹூவர்ட்டை கருத்தை மேற்கோள் காட்டிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், "இந்த வழக்கில் நடந்தது லார்ட் ஹூவர்ட் கூறிய கருத்திற்கு முரணானது. அத்தகைய செயல்களை நாங்கள் ஆதரிக்க முடியாது. எனவே, உயர்நீதிமன்ற நீதிபதி ஓய்வு பெற்ற பின்னர் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து வழக்குகளை மறுபரிசீலனைக்கு உயர்நீதிமன்றத்திற்கு அனுப்ப விரும்புகிறோம். சர்ச்சைகளுக்காக இந்த தீர்ப்பை வழங்கவில்லை. உயர் நீதிமன்றத்தில் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க முடியும்." என்று கூறிய நீதிபதிகள் தீர்ப்பை ரத்து செய்தனர்.












Click it and Unblock the Notifications