தமிழகம் பற்ற வைத்த நெருப்பு.. நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி, கொல்கத்தாவிலும் போராட்டம்!
டெல்லி: நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக தமிழ்நாட்டைத் தொடர்ந்து டெல்லி மேற்கு வங்கத்திலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நடத்தவே கூடாது என்பது தமிழ்நாட்டின் நிலைப்பாடு. தமிழ்நாட்டுக்கு நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சட்டசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நடப்பாண்டு நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் அம்பலமாகி ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றது, 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கியது உள்ளிட்டவைகளால் சர்ச்சைகள் வெடித்தன. நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது என்பதும் குற்றச்சாட்டு.
இதனால் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாட்டு மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதனைத் தொடர்ந்து வட இந்தியாவிலும் போராட்டங்கள் தொடருகின்றன.
நீட் தேர்வைக் கண்டித்து டெல்லியில் தொடர்ந்து காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் நேற்றும் காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். அப்போது 24 லட்சம் மாணவர்களுக்கு நீட் தேர்வுதான் தேவை- நீட் ஊழல் அல்ல என முழக்கமிட்டனர்.
#WATCH | West Bengal: All India Democratic Students Organisation (AIDSO) members hold a protest in front of Bikash Bhavan in Kolkata, over the issue of NEET-UG results.
— ANI (@ANI) June 13, 2024
The protestors were later detained by Police. pic.twitter.com/il6QftW7DC
இதேபோல மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலும் நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நேற்று போராட்டங்கள் நடைபெற்றன. கொல்கத்தாவில் அனைத்திந்திய ஜனநாயக மாணவர் இயக்கம் சார்பில் இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இப்போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
முன்னதாக நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் ஆஜரான நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையானது, கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும். நீட் மறுதேர்வு ஜூன் 23-ந் தேதி நடத்தப்படும்; நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூன் 30-ந் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தது. இதனை உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.












Click it and Unblock the Notifications