இமாலய தோல்வி அடைந்துவிட்டதாம் மோடி அரசின் லடாக் பாதுகாப்பு கொள்கை- ராகுல் குரலில் சு.சுவாமி
டெல்லி: லடாக் எல்லை பாதுகாப்பு தொடர்பான கொள்கையில் பிரதமர் மோடி அரசு இமாலய தோல்வி அடைந்துவிட்டது என்று பாஜகவை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.யான சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ஜனதா கட்சியைக் கலைத்துவிட்டு பாஜகவில் சேர்ந்தது முதல் மத்திய அமைச்சர் பதவி தமக்கு கிடைப்பதற்காக தொடர்ச்சியாக காய்நகர்த்தி வருவதும் அதற்காக மத்திய அரசை விமர்சிப்பதும் சுப்பிரமணியன் சுவாமியின் வாடிக்கை. நிதி அமைச்சர்கள், ரிசர்வ் வங்கி ஆலோசகர்கள், பொருளாதார ஆலோசகர்கள் ஆகியோரை பாஜகவில் இருந்து கொண்டே விமர்சித்தவர் சுப்பிரமணியன் சுவாமி.
மத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது தமக்கு பதவி கிடைக்கும் என்கிற செய்தியை பரப்பிவிட்டு அதையே ரீட்வீட் செய்வார். ஆனால் பாஜக மூத்த தலைவர்கள் யாரும் சுப்பிரமணியன் சுவாமியை கண்டுகொள்வதே இல்லை.

பாதுகாப்பு,வெளியுறவு
தற்போது நிதி அமைச்சகத்தில் இருந்து தனது டார்கெட்டை பாதுகாப்பு, வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு மாற்றி இருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி. அண்மைக்காலமாக மத்திய அரசின் பாதுகாப்பு கொள்கை, வெளியுறவுக் கொள்கையை விமர்சித்து வருகிறார் அவர். அத்துடன் திடீரென இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டு தலைவர்களையும் சந்தித்து பேசினார் சு.சுவாமி.
Recommended Video

இலங்கை பயணம் சர்ச்சை
இத்தனைக்கும் நாட்டின் ராணுவ தளபதி நரவனே இலங்கையில் முகாமிட்டு சீனாவின் மேலாதிக்கத்தை தடுக்க பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த சூழ்நிலையில் சுப்பிரமணியன் சுவாமி இலங்கை சென்றார். சுப்பிரமணியன் சுவாமி ஏற்கனவே சீனாவின் சார்பு நிலைப்பாடு கொண்டவர். அதனால் மத்திய அரசின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் சுப்பிரமணியன் சுவாமியின் சந்திப்புகள் இருந்திருக்கலாம் என்கிற சந்தேகத்தை பாதுகாப்பு தரப்பு ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர்.

இமாலய தவறாம்
இந்நிலையில்தான் தமது ட்விட்டர் பக்கத்தில் நாட்டின் பாதுகாப்பு கொள்கையை பகிரங்கமாக விமர்சித்திருக்கிறார் சு.சுவாமி. அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், லடாக் தொடர்பான பாதுகாப்பு கொள்கையில் மோடி அரசு இமாலய தோல்வி அடைந்துவிட்டோம் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நாட்டின் வெளியுறவு கொள்கை, பாதுகாப்பு கொள்கையும் தோற்றுவிட்டதாம். லடாக் எல்லையில் சீனாவின் ஊடுருவலுக்கு எதிராக நமது வீரர்கள் உயிரைக் கொடுத்து போராடி வருகின்றனர். இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமியின் இப்பதிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராகுல் குரலில் சு.சுவாமி
அத்துடன் சுப்பிரமணியன் சுவாமியின் ட்விட்டர் பக்கம் முழுவதும் மத்திய அரசின் பாதுகாப்பு கோட்பாடுகளை விமர்சிக்கும் பதிவுகள் ரீ ட்வீட் செய்யப்பட்டுள்ளன. சுப்பிரமணியன் சுவாமி தீவிர இந்துத்துவா நிலைப்பாடு கொண்டவர்தான். ஆனாலும் மத்திய பாஜக அரசின் மீதான இந்த கடுமையான விமர்சனத்தை பாஜக தலைவர்கள் பலரும் ரசிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. சுப்பிரமணியன் சுவாமியின் இந்த குரல் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் குரலாகவே இருக்கிறது என்றும் ஆதங்கப்படுகின்றனர் பாஜக தலைவர்கள்.












Click it and Unblock the Notifications