சும்மா வந்து போகவில்லை ராகுல் காந்தி.. செய்த மாஸ் காரியம்.. கொண்டாடும் திருப்பூர் மக்கள்!
டெல்லி : நூல் விலை உயர்வால் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதன் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
கடந்தமுறை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்தபோது கோவை மற்றும் திருப்பூர் உள்ள வணிகர்களை சந்தித்தார். அப்போது பின்னலாடை ஜவுளி துறை ஏற்றுமதியாளர்கள் அவரிடம் ஜிஎஸ்டி வரி மற்றும் பக்கத்து நாடுகளில் உள்ள போட்டி போன்றவற்றை சுட்டிக்காட்டி தங்களின் சிரமத்தை விவரித்தனர்.
இதை மிகவும் கவனமுடன் கேட்டுக்கொண்ட ராகுல்காந்தி டெல்லிக்கு வந்த பின், திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் கோரிக்கை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா லாக்டவுன்
அந்த கடிதத்தில் ராகுல் காந்தி கூறுகையில், கொரோனா தொற்று பரவல் டெக்ஸ்டைல் தொழிலை கடுமையாக பாதித்துள்ளது.. கொரோனா லாக்டவுன் விதிமுறைகள் காரணமாக மில்கள் இயங்காத காரணத்தால் நூல் உற்பத்தி தொடர்ந்து குறைந்தது. தற்போது தான் நூல் உற்பத்தி மெதுவாக உயர்ந்து வருகிறது.

வங்கதேசம்
எனினும் காட்டன் நூல் உயர்வு ஆயிரக்கணக்கான சிறுகுறு ஜவளி தொழில் நிறுவனங்களை பாதித்துள்ளது. நூல் விலை அதிகரித்து வரும் நிலையில், வியட்நாம், வங்கதேசம், பெரு போன்ற நாடுகளுக்கு நூல் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

கடும் போட்டி
வியட்நாம், வங்கதேசம் போன்ற மற்ற போட்டி நாடுகள் குறைந்த விலைக்கு துணியை உற்பத்தி செய்து தருவதால், இந்தியாவின் பின்னலாடை தொழில் நடத்துபவர்கள் கடும் போட்டியை சந்திக்கிறார்கள் மறுபக்கம் ரூபாய் நோட்டு செல்லாத நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி வரி காரணமாகவும் இந்திய ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அண்மையில் திருப்பூருக்கு நான் சென்ற போது என்னிடம் பின்னாலடை ஏற்றுமதியில் தாங்கள் சந்திக்கும் சிக்கல்களை விவரித்தார்கள்.

பருத்து நூல் விலை
எனவே மத்திய அரசு பருத்தி மற்றும் பருத்தி நூல் ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதித்து நூல் விலையை குறைக்க நடவடிக்கை வேண்டும். இது தொடர்பாக கார்மென்ட்ஸ் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் அனுப்பி கடிதத்தை இணைத்துள்ளேன். நமது சகோதர சகோதரிகளுக்கு சர்வதேச சந்தையில் உள்ள போட்டிகளை கருத்தில் கொண்டு தங்கள் ஆதரவை தர வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்" இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார். ராகுல் கடிதம் எழுதிய தகவல் பரவியதால் திருப்பூர் மக்களிடம் அவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.