பொதுமக்களுக்கு சூப்பர் நியூஸ்.. இனி ரயில்கள் தாமதமானால் இழப்பீடு.. உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு
டெல்லி: ரயில்கள் தங்கள் கட்டுப்பாட்டை மீறிய காரணங்களால் தாமதமாக இயங்கப்பட்டதை நிரூபிக்க முடியவில்லை என்றால் அந்த ரயில்களில் பயணித்த பயணிகளுக்கு இழப்பீடு தர வேண்டும் என உச்ச நீதிமன்றம் ரயில்வே துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு நகரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கடந்த 2016இல் ஸ்ரீநகருக்கு ரயில் மூலம் பயணிக்க இருந்தனர். இருப்பினும், ரயில் சுமார் 4 மணி நேரம் தாமதமானதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து வேறு வழியின்றி அதிக விலைக்குக் கால் டாக்ஸி பிடித்து ஸ்ரீநகருக்குச் சென்றுள்ளனர். அப்படியிருந்தும் கூட இவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய விமானத்தையும் தவறவிட்டனர், அதேபோல ஸ்ரீநகர் தால் ஏரியில் படகு சவாரிக்குச் செய்யப்பட்டிருந்த முன்பதிவும் வீணானதாகக் கூறப்படுகிறது.

இழப்பீடு வழங்கி உத்தரவு
இது தொடர்பாக அந்த குடும்பத்தினர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். ரயில்வே துறையின் தேவையற்ற கால தாமதம் காரணமாகப் பாதிக்கப்பட்டதால் இழப்பீடு வழங்க வேண்டும் என வழக்குத் தொடர்ந்திருந்தனர். ஜம்முவில் ரயில் புறப்பட ஏன் காலதாமதமானது என்ற விளக்கத்தை ரயில்வே துறையால் அளிக்க முடியவில்லை. இதையடுத்து கால் டாக்ஸிக்கு செலவிட்ட ரூ 15 ஆயிரம், படகு முன்பதிவுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க உத்தரவிட்டனர். மேலும், குடும்பத்தினருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காகவும் வழக்கு செலவுக்காகவும் தலா ரூ 5 ஆயிரம் விகிதத்தில் ரூ 30 ஆயிரம் வழங்கவும் வடமேற்கு ரயில்வே துறைக்கு உத்தரவிடப்பட்டது.

மேல் முறையீடு
இதை எதிர்த்து வடமேற்கு ரயில்வே துறை சார்பில் மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்திலும் தேசிய நுகர்வோர் தீர்ப்பாயத்திலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இருப்பினும், காலதாமதத்திற்கான காரணத்தைக் கூற முடியாததால் கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பே உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வடமேற்கு ரயில்வே துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

ரயில்வே பொறுப்பில்லை
அப்போது ரயில்வே துறை தரப்பில் ஆஜரான மத்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி கூறுகையில், "ரயில்கள் தாமதமாகும் ஒரே காரணத்திற்காக ரயில் சேவையில் குறைபாடு உள்ளது எனச் சொல்ல முடியாது. ரயில்வே விதிகள் 114 மற்றும் 115 ஆகிய விதிகள் படி ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டால் அதற்கு இழப்பீடு வழங்கும் பொறுப்பை ரயில்வே துறை ஏற்காது. ரயில்கள் தாமதமாக இயக்கப்பட பல்வேறு காரணங்கள் இருக்கலாம்" என்றார்.

ஏற்றுக்கொள்ள முடியாது
இருப்பினும் நீதிபதிகள் இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. நீதிபதிகள் கூறுகையில், "ஜம்முவுக்கு ரயில் ஏன் தாமதமாக வந்தது என்பதற்கு எந்தவொரு காரணமும் கூறப்படவில்லை. தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்களால் தான் ரயில்கள் தாமதமானது என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு ரயில்வே துறைக்கே உள்ளது. குறைந்தது ரயில்கள் ஏன் தாமதமாகின என்பதற்காவது ரயில்வே விளக்கம் அளிக்க வேண்டும், ஆனால், அதைக்கூட ரயில்வே செய்யவில்லை.

இழப்பீடு வழங்க வேண்டும்.
ரயில்களில் பயணிக்கும் ஒவ்வொரு பயணியின் நேரமும் விலை மதிக்க முடியாதவை. இந்த வழக்கில் இருப்பதைப் போலப் பயணிகள் தங்கள் அடுத்தடுத்த பயணத்துக்கு (connecting journey)கூட முன்பதிவு செய்திருக்கலாம். ரயில் ஏன் தாமதமாக இயக்கப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. அதேபோல தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்களால் தான் ரயில் தாமதமானது என்பதையும் ரயில்வே நிரூபிக்கவில்லை. இதுபோன்ற நிகழ்வுகளில் அந்த ரயில்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் இழப்பீடு தர ரயில்வே கடமைப்பட்டுள்ளது" என்று கூறி வட மேற்கு ரயில்வே தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications