‛‛ஆங்கிலேயர்களின் அடிமை’’.. ‛‛திப்பு’’ ரயில் பெயர் மாற்றத்தால் பாஜகவை நேரடியாக தாக்கி பேசிய ஓவைசி
டெல்லி: முஸ்லிம் மன்னராக திப்புவின் பெயரில் இயங்கிய ரயிலுக்கு இந்து மன்னராக உடையார் பெயர் சூட்டப்பட்ட நிலையில் ஆங்கிலேயர்களின் அடிமை என்று பாஜகவை நேரடியாக அசாதுதீன் ஓவைசி தாக்கி பேசி உள்ளார்.
மைசூர் மன்னராக இருந்தவர் திப்பு சுல்தான். இவர் 1782 முதல் மைசூர் மன்னராக செயல்பட்டு வந்தார். ஆங்கிலேயர்களை எதிர்த்து இவர் 3 முறை போரிட்டார். இதில் 1799ல் நடந்த போரில் வீழ்த்தப்பட்டு துப்பாக்கி குண்டு பாய்ந்து திப்பு சுல்தான் இறந்தார்.
ஆங்கிலேயர்களை எதிர்த்த இவர் மைசூர் புலி என்று அழைக்கப்பட்டு வருகிறார். இவர் தனது ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்கு புதுமையான திட்டங்களை செயல்படுத்தினார். ராணுவ தொழில்நுட்பத்திலும் திறம்பட செயல்பட்டு இருந்தார்.
இஸ்லாமிய சகோதர சகோதரிகளே.. 'மிலாதுன் நபி நல்வாழ்த்துக்கள்'.. பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்!

ரயில் பெயர் மாற்ற கோரிக்கை
இந்நிலையில் தான் இவரது நினைவாக பெங்களூர் - மைசூர் இடையே திப்பு எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. 1980ல் இருந்து மைசூர்-பெங்களூர் இடையே இந்த ரயில் சேவை இயங்கி வருகிறது. இந்த ரயிலின் பெயரை உடையார் எக்ஸ்பிரஸ் என மாற்ற வேண்டுமென்று மைசூர் எம்பி பிரதாப் சிம்ஹா உள்பட பாஜகவினர் கோரிக்கை வைத்தனர். இதனை ரயில்வே அமைச்சகம் ஏற்றுக்கொண்டது.

உடையார் எக்ஸ்பிரஸ் என மாற்றம்
அதன்படி தற்போது பெங்களூர்-மைசூர் இடையே இயங்கிய திப்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயர் உடையார் எக்ஸ்பிரஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ரயில் சேவையை விரிவுப்படுத்த இந்துவான மைசூரு உடையார் மன்னர்களின் பங்கு முக்கியமானதாகும். அதன் நினைவாக இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியினர் விமர்சனம்
இந்நிலையில் தான் திப்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயரை உடையார் எக்ஸ்பிரஸ் ரயில் என மாற்றம் செய்யப்பட்டு உள்ளதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முஸ்லிம் மன்னரான திப்பு சுல்தான் வரலாற்றை மறைக்கும் வகையில் பாஜகவினர் செயல்பட்டு வருகின்றனர். முதலில் அவர் பற்றிய குறிப்புகளை பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து நீக்க பாஜகவினர் முயன்ற நிலையில் ரயிலுக்கு சூட்டிய அவரது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது என எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜகவினரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

பெயர் மாற்றத்துக்கு ஓவைசி எதிர்ப்பு
இதன் தொடர்ச்சியாக தற்போது திப்பு எக்ஸ்பிரஸ் ரயில் பெயர் மாற்றத்துக்கு ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும் எம்பியுமான அசாதுதீன் எம்பி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛ திப்பு எக்ஸ்பிரஸ் என்ற பெயரை உடையார் எக்ஸ்பிரஸ் என பாஜக அரசு மாற்றி உள்ளது. இதனை செய்யாமல் இன்னொரு ரயிலுக்கு உடையார் பெயரை சூட்டியிருக்கலாம். திப்பு என்பவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக 3 முறை போரிட்டார். திப்புவின் பாரம்பரிய வரலாற்றை பாஜகாவால் ஒருபோதும் அழிக்க முடியாது. அவர் உயிருடன் இருந்தபோது ஆங்கிலேயர்களை பயமுறுத்தினார். இப்போதும் ஆங்கிலேயர்களின் அடிமைகளை பயமுறுத்துகிறார்'' என சாடியுள்ளார்.