ஒன்னு இல்லீங்க.. மொத்தம் இரண்டு! நீட் வினாத்தாள் கசிவு குறித்து உண்மையை உடைத்த உச்சநீதிமன்றம்
டெல்லி: நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இது குறித்து ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, மத்திய அமைச்சர் நீட் தேர்வில் முறைகேடு நடக்கவில்லை என்று கூறியிருந்தார். ஆனால், உச்சநீதிமன்றம் பீகாரில் முறைகேடு நடந்திருப்பதாக கூறியுள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்தன.

இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில், இன்று மக்களவையில் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருந்தார்.
"இந்தியாவின் தேர்வு முறைகளிலேயே பெரிய பிரச்சனை இருப்பது அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. இந்திய தேர்வு முறையே மோசடி என்று பலர் நம்புகின்றனர் . பணக்காரராக இருந்தால் தேர்வு முடிவுகளை சாதகமாக பெற்றுக்கொள்ள முடியும் என்று லட்சக்கணக்கானோர் நம்புகின்றனர். ஒன்றிய கல்வி அமைச்சர் தன்னை தவிர மற்ற அனைவரையும் பொறுப்பாளியாக்க பார்க்கிறார்" என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், இதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சாகு விளக்கமளித்துள்ளார். அதில், "7 ஆண்டுகளில் 70 முறை வினாத்தாள் கசிவு ஏற்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வினாத்தாள் கசிவு குறித்து தற்போது நீதிமன்றத்தில் வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை நடைபெற்று வருகிறது. பாட்னாவில் இருக்கும் ஒரே ஒரு மையத்தில் மட்டுமே வினாத்தாள் கசிவு சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணையும் நடைபெறுகிறது. அனைத்து இடங்களிலும் முறைகேடு நடந்திருப்பதாக கூறுவது தவறு.
இந்திய தேர்வு முறை இன்னும் தனது புனிதத்தை இழந்து விடவில்லை. சில மனித தவறுகளே குழப்பத்திற்கு காரணம். கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்த குளறுபடிகள் போல் இப்போது எதுவும் நடைபெறவில்லை" என்று கூறியிருந்தார்.
ஆனால், உச்சநீதிமன்றம் இரண்டு இடங்களில் நீட் வினாத்தாள் கசிந்திருக்கிறது என்று கூறியிருக்கிறது. முறைகேடு காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இது இன்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நீதிபதிகள் ஜேபி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.
அதில் மனுதாரர் தரப்பில், "மே 5ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடந்திருக்கிறது. ஆனால், மே 4ம் தேதி வினாத்தாள் கசிந்திருக்கிறது. குறிப்பிட்ட சில தேர்வு மையங்களில் தேர்வெழுதியவர்களில் பலர் 600 மதிப்பெண்களுக்கு அதிகமாக எடுத்திருக்கிறார்கள். தேர்வுக்கான வினாத்தாள் எங்கு அச்சடிக்கப்படுகிறது என்பது கூட யாருக்கும் தெரியாது" என்று கூறுகிறார்கள். அப்படி இருக்கும்போது வினாத்தாள் எப்படி லீக்காகி இருக்கும்? எனவே, அனைவருக்கும் நீட் மறுதேர்வு நடத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
தலைமை நீதிபதி சந்திரசூட், "தற்போது கிடைத்துள்ள தரவுகளின்படி, பாட்னா உள்ளிட்ட 2 இடங்களில் வினாத்தாள் கசிந்தது உறுதியாகியுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு இந்த இரண்டு இடங்களில் மட்டும்தான் உள்ளதா? இல்லை நாடு முழுவதும் பரவியுள்ளதா? என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக இன்று காலை நாடாளுமன்றத்தில், "ஒரே ஒரு மையத்தில் மட்டுமே வினாத்தாள் கசிவு சம்பவம் நடந்துள்ளது" என்று மத்திய கல்வி அமைச்சர் கூறியிருந்தார். ஆனால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியோ இரண்டு இடங்களில் வினாத்தாள் கசிந்திருக்கிறது என்று கூறியுள்ளார். இப்படியாக நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து முரணான கருத்துக்கள் வெளியாகியுள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் விமர்சித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications