தனிநபர் தரவு மீறல்- ரூ250 கோடி அபராதம் இல்லையா? மத்திய அரசின் டிஜிட்டல் பாதுகாப்பு வரைவு விதிகள்!
டெல்லி: டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்துக்கான 'வரைவு விதிகளை' மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிகள் மீதான கருத்துகளை பிப்ரவரி 18-ந் தேதிக்குள் தெரிவிக்கலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தனிநபர் தரவுகளை தவறாகப் பயன்படுத்தினால் ரூ250 கோடி வரை அபராதம் விதிக்க வகை செய்யும் இந்த சட்டம் கடந்த 2023-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் தற்போதைய மத்திய அரசு விதிகளில் ரூ250 கோடி அபராதம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதால் குழப்பம் நீடிக்கிறது..
டிஜிட்டல் தளங்களான வெப்சைட்டுகள் (ஆன்லைன் இணையதளம்), ஆப்கள் (செயலிகள்) ஆகியவற்றில் தனிநபர்களின் தகவல்களை (தரவுகளை) பாதுகாக்க 2019-ம் ஆண்டு Personal Data Protection Bill கொண்டுவரப்பட்டது. இந்த தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற கூட்டுக் குழு விவாதித்து 81 திருத்தங்கள், 12 பரிந்துரைகள் இந்த மசோதா மீது வழங்கியது. இதனடிப்படையில் புதிய மசோதாவை 2023-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய பாஜக அரசு. டிஜிட்டல் தளங்களில் தனிநபரின் தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் ரூ,250 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க வகை செய்கிறது இந்த சட்டம்.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு 14 மாதங்களுக்குப் பின்னர் நேற்றுதான் மத்திய அரசு இந்த சட்டத்துக்கான வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிகளின்படி, டிஜிட்டல் வடிவங்களில் தனிநபரின் தரவுகளை பயன்படுத்தும் முன்னர் அவரது ஒப்புதல் மிகவும் அவசியமானதாகும்; அதே நேரத்தில் குழந்தைகளின் தரவுகளை பயன்படுத்த பெற்றோரின் ஒப்புதல் கட்டாயமாகும். இ காமர்ஸ், சோசியல் மீடியாக்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டு வெப்சைட்டுகள் அனைத்தும் இந்த புதிய சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் தனிபர் தரவுகளை டிஜிட்டல் தளங்களில் பயன்படுத்திய உடனே அழித்துவிடவும் வேண்டும் என்கிறது இந்த விதிகள். இந்த விதிகளை மீறினால் முன்னர் ரூ250 கோடி அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசு வெளியிட்ட புதிய விதிகளில் அபராதத் தொகை பற்றி குறிப்பிடப்பவில்லை என்பதால் குழப்பம் நீடிக்கிறது.
மேலும் 18 வயதுக்குட்பட்டவர்கள் சோசியல் மீடியாக்களைப் பயன்படுத்த பெற்றோரின் அனுமதி கட்டாயம் தேவை என்கிறது புதிய விதிகள்.
இப்புதிய வரைவு விதிகள் தொடர்பாக https://mygov.in/ இணையதளத்தில் பொதுமக்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்கிறது மத்திய அரசு. பிப்ரவரி 18-ந் தேதிக்குள் இந்த தளத்தில் பொதுமக்கள் கருத்துகளை பதிவு செய்யலாம். இதனடிப்படையில் மத்திய அரசு இறுதி செய்யப்பட்ட புதிய விதிகளை வெளியிடும்.












Click it and Unblock the Notifications