விஜய்யை சிபிஐ சென்னையிலேயே விசாரித்திருக்கலாமே! வந்து விழுந்த கேள்வி! தமிழிசை பதிலை பாருங்க
டெல்லி: டெல்லியில் வைத்து விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்தப்பட்டது ஏன் என்பது குறித்தும் விஜய்யை சுற்றி நடக்கும் அரசியலுக்கு பாஜகவின் அழுத்தம்தான் காரணமா என்ற கேள்விக்கும் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பதில் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக பொதுக் கூட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துவிட்டனர். கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தொடர்கிறது.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் சுமார் 7 மணி நேரம் விசாரிக்கப்பட்டார். அடுத்த விசாரணை தேதி விரைவில் அறிவிக்கப்படும். விஜய் டெல்லியில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதற்கு, பாஜகவின் அழுத்தம் காரணம் என பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
பாஜகவின் தலையீடு குறித்த விமர்சனங்கள் பற்றி மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கேட்கப்பட்டது. அவர், "தமிழக அரசு அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை நம்பாமல், சிபிஐ விசாரணை கோரியதே தமிழக வெற்றிக் கழகம்தான். தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் உண்மை நிலவரம் தெரியும்" என்றார்.
"சட்டப்படி நடக்கும் ஒரு விஷயத்திற்கு பாஜக எப்படி காரணமாகும்?" எனக் கேள்வி எழுப்பிய தமிழிசை, உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதால், அனைத்தும் சட்டமீறல் இன்றி நடக்கின்றன என்றார். இத்தகைய சூழலில், பாஜகவை மட்டும் குற்றம் சாட்டுவது நியாயமா எனவும் அவர் எதிர்க் கேள்வி எழுப்பினார்.
விஜயைச் சுற்றி அரசியல் நடப்பதாகக் கூறிய தமிழிசை, அந்த அரசியலுக்கு பாஜக காரணமில்லை என்றார். மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் கரூர் வழக்கு நிலுவையில் இருந்தும், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறித்து உச்ச நீதிமன்றத்தின் கேள்விகள் அவரிடம் முன்வைக்கப்பட்டன. இதற்கு, "டெல்லியிலும் சிபிஐ அலுவலகம் இருப்பதால், விசாரணை அங்கு நடந்திருக்கலாம்" என அவர் பதிலளித்தார்.
கரூர் விவகாரம் குறித்து டெல்லியில் விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் தனி அறையில் வைத்து விசாரிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதால் விசாரணை முடிந்து வெளியே வந்த அவரது முகம் வாடி இருந்ததாக தெரிகிறது.
விஜயிடம் விசாரணை தொடங்கியபோது, அதிகாரிகள் பல கேள்விகளை எழுப்பினர். "கரூரில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது யார்? உங்களுக்கு அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்பட்டதா? நிகழ்ச்சிக்குச் செல்லப் பல மணி நேர தாமதம் ஏன்?" என ஒன்றரை மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்றது.
மேலும், "கூட்டம் அதிகரித்தபோது கட்டுப்படுத்த முயற்சித்தீர்களா? கூட்ட நெரிசல் பற்றி எப்போது அறிந்தீர்கள்? இதுகுறித்து நிர்வாகிகள் முன்கூட்டியே உங்களுக்குத் தெரிவிக்கவில்லையா? தண்ணீர், பாதுகாப்பான நுழைவு, வெளியேறும் வழி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டதா?" என்றும் சிபிஐ அதிகாரிகள் விஜயிடம் கேள்வி எழுப்பினர்.
விஜய் ஒவ்வொரு கேள்விக்கும் விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே பலரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஏழு மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, ஆவணங்களில் கையெழுத்திட ஒன்றரை மணி நேரம் அவர் தனி அறையில் அமரவைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 13 ஆம் தேதியும் அவரிடம் விசாரணை நடத்த வருமாறு சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு விஜய், சென்னையில் கட்சி சார்பில் "பொங்கல் விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே நாளை ஆஜராவதில் இருந்து விலக்கு அளியுங்கள்" என வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகள், "ஜன.13 அன்று விலக்கு அளிக்க வேண்டும் என்றால் இன்னொரு நாள் சம்மன் அனுப்பும் போது ஆஜராக வேண்டும்" என நிபந்தனை விதித்தனராம். இதற்கு விஜய் ஒப்புக் கொண்டதால் ஜன.13 விசாரணையில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது
தவெக தலைவர் விஜயிடம் நடைபெறவிருந்த சிபிஐ விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. எனினும் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு மீண்டும் இந்த விசாரணை தொடரும் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications