மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருடன் பேச்சுவார்த்தை- மல்யுத்த வீரர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!
டெல்லி: மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்க கோரும் விவகாரத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருடனான பேச்சுவார்த்தைக்குப் பின் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் அறிவித்துள்ளனர்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் அத்துமீறல் புகார் செய்தனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் தலைவிதியை தீர்மானிக்கக் கூடியவர் என்ற காரணத்தால் பிரிஜ் பூஷண் மீது மத்திய அரசு கைவைக்கவில்லை. இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்துக்கும் போனது. உச்சநீதிமன்றம் கடுமை காட்டிய பின் வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டது. ஆனால் பிரிஜ் பூஷண் கைது செய்யப்படவில்லை.

ஏற்கனவே டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாத கால போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர் வீராங்கனைகள், புதிய நாடாளுமன்றத்தை திறப்பு விழாவின் போது முற்றுகையிட்டு போராட சென்றனர். அப்போது அவர்கள் மீது போலீசார் வன்முறையை கட்டவிழ்த்துவிட நாடு கொந்தளித்தது.
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென, மல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று இன்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அனுராக் தாக்கூரை சந்தித்து பேசினர். மல்யுத்த வீரர்கள் சார்பாக பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் ஆகியோர் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பல மணிநேரம் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இப்பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, போலீஸ் நடத்தி வரும் விசாரணை ஜூன் 15-ந் தேதிக்குள் முடிவடையும் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். இதற்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஒப்புக் கொண்டுள்ளார். எங்களுக்கு வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் ஜூன் 15-க்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் நாங்கள் போராட்டத்தை தொடருவோம் என்றார். மேலும் நீதிக்கான எங்கள் போராட்டம் முடியவில்லை என மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கூறினார்.












Click it and Unblock the Notifications