மதுரை எய்ம்ஸ் பணி 2026ல் தான் முடியும்.. கொரோனா மீது பழிபோட்ட மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர்!
தர்மபுரி: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணி கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டது. இதனால் மதுரை எய்ம்ஸ் பணி 2026ல் முழுமையாக முடிம் என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் கூறினார்.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015ல் மத்திய அரசு அனுமதி வழங்கியது. மருத்துவமனை கட்டும் பணிக்கு 2019ல் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
தற்போது 2022ம் ஆண்டு நடக்கும் நிலையில் சாலை மற்றும் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. வேறு எந்த பணிகளும் நடைபெறவில்லை. எய்ம்ஸ் கட்டும் பணி என்பது மந்த கதியில் உள்ளது.
2வது நாள் ஆபரேஷன் மின்னல்.. 48 மணிநேரத்தில் 1,310 ரவுடிகளை தட்டித்தூக்கிய போலீஸ்.. பரபர தமிழ்நாடு

மதுரை எய்ம்ஸ் விவாதம்
இதற்கிடையே சமீபத்தில் தமிழகம் வந்த பாஜக தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜேபி நட்டா, எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி பேசினார். அப்போது அவர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 95 சதவீதம் வரை முடிவடைந்துள்ளதாக கூறினார். இது விவாதத்துக்குள்ளானது. ஏனென்றால் மதுரை எய்ம்ஸ்க்கு சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.

பாஜக சார்பில் விளக்கம்
இதையடுத்து மதுரை எம்பி சு வெங்கடேசன், விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்துக்கு சென்று எய்ம்ஸை காணவில்லை என கூறிய வீடியோ வலைதளங்களில் பரவியது. இதையடுத்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பூர்வாங்க பணிகள் தான் 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. இதனை தான் ஜேபி நட்டா கூறியதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் சிலர் எய்ம்ஸை கண்டுப்பிடித்து கொடுக்கும்படி போலீசில் புகார் தெரிவித்தனர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்
இந்நிலையில் தான் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் 2 நாள் சுற்றுப்பயணமாக தருமபுரி வந்தார். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர் சுகாதாரத்துறை சார்ந்து அதிகாரிகளுடன் விவாதித்தார். இந்நிலையில் அவர் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

2026ல் எய்ம்ஸ் பணி முடிவு
மத்திய அரசின் சுகாதார துறையின் திட்டங்கள் குறித்து மக்களிடம் விளம்பரப்படுத்த தமிழ்நாட்டிற்கு ரூ.24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தருமபுரி மாவட்டத்துக்கு மட்டும் ரூ.68 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு சார்பில் வெளியாகும் விளம்பரங்களில் பிரதமர் மோடியின் பெயர், படம் இல்லை. இது வருத்தத்துக்கு உரியது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி கொரோனா பரவலால் தடைபட்டது. தற்போது கூடுதல் நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கியுள்ளன. 2026ல் பணிகள் நிறைவு பெற்று செயல்பட தொடங்கும்'' என்றார்.