200 ஆண்டுக்கு முன்னர் சோழர் அரசா? ஜான்சி ராணி தமிழக வீரரா? மத்திய அரசு செய்திக் குறிப்பால் சர்ச்சை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம கிராமியப் பல்கலைக் கழகத்தில் தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள் கண்காட்சியில் ஜான்சி ராணி படம் இடம்பெற்றதாக மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சி தொடர்பாக மத்திய அரசு தமிழில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 200 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் ஆண்டபோது, கட்டடக்கலைப் படிப்பு இல்லை. எனினும், சிறந்த ஆளுமை, படைப்புத்திறன் காரணமாக அவர்கள் பல கட்டடங்கள் மற்றும் கோவில்களை உருவாக்கியதாக தெரிவித்தார். தாய்மொழிக் கல்விதான் அதிக பலன் தரும் என்று கூறிய அவர், பிரதமரி்ன் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை தொடங்கப்பட்டதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுதந்திர தின அமிர்தப் பெருவிழாவை முன்னிட்டு, காந்தி கிராம் கிராமியப் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியார், ஜான்சி ராணி, மருது சகோதரர்கள், ராணி மங்கம்மாள், வீரபாண்டிய கட்டபொம்மன் உட்பட 40 தமிழக சுதந்திரப் போராட்ட தலைவர்களின் புகைப்படக் கண்காட்சி மற்றும் சுதந்திரப் போராட்டம் தொடர்பான ஒலி-ஒளிக் காட்சியை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் காந்தி அருங்காட்சியகத்தையும் அவர் பார்வையிட்டார். மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் உடனிருந்தார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சோழர்கள் ஆட்சிக் காலம் என்பது கி.பி.13-ம் நூற்றாண்டுடன் முடிவுக்கு வந்துவிட்டது. அதன்பின்னர் தமிழர் நிலப்பரப்பில் ஏராளமான ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தன. நாயக்கர்கள் சில நூற்றாண்டுகள், ஆங்கிலேயர்கள் சில நூற்றாண்டுகள் என ஆண்டு ஓய்ந்தனர். ஆனால் மத்திய அமைச்சர் தமது பேச்சில் 200 ஆண்டுகளுக்கு முன்னர்தான் சோழர்கள் ஆண்டதாக கூறினார் என மத்திய அரசு செய்திக் குறிப்பு தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியது என்கின்றனர் கல்வியாளர்கள்.

அதேபோல் 40 தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள் தொடர்பான கண்காட்சி படங்கள் சரியாகத்தான் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் மத்திய பாஜக அரசின் செய்திக் குறிப்பில், ஜான்சி ராணியையும் சேர்த்து பதிவு செய்துள்ளனர். வீரபாண்டிய கட்டபொம்மனும், மருது சகோதரர்களும் வேலுநாச்சியாரும் ஜான்சி ராணிக்கு 100 ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து வீர மரணம் அடைந்த மாவீரர்கள்; ஆனால் ஜான்சி ராணியை தமிழக வரலாற்றில் சேர்ப்பது எப்படி சரியாகும் என்பதும் சமூக ஆர்வலர்களின் கேள்வி.












Click it and Unblock the Notifications