திண்டுக்கல் 100 கோடி கோவில் நிலம் 2 கோடிக்கு கிரயம்? பழனி சார்பதிவாளரிடம் மீண்டும் விசாரணை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 1.4 ஏக்கர் நிலம், மிகக் குறைந்த விலைக்கு மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் 2-வது நாளாக இன்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 6ம் தேதி, பழனியில் உள்ள கோவில் மடத்திற்கு சொந்தமான 1.4 ஏக்கர் நிலத்தை வெள்ளத்துரை மற்றும் சேதுபதி ஆகிய 2 பேரின் பெயர்களுக்குப் பத்திரப்பதிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல் 100 கோடி நிலம்
மார்க்கெட் மதிப்பில் சுமார் 100 கோடி ரூபாய் வரை பெறக்கூடிய இந்த சொத்தை, ஆவணங்களில் வெறும் 2 கோடி ரூபாய்க்கு மட்டுமே கணக்கு காட்டி கிரயம் செய்து மிகப்பெரிய அளவில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, போலீசார் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், பழனி சார்பதிவாளர் அலுவலகத்திலேயே இந்த அக்கிரமம் நடந்தது அம்பலமானது. அரசு ஆவணங்களில் அது கோவில் சொத்து என்ற உண்மையான விவரத்தை முற்றிலும் மறைத்து, தனிநபர்களுக்குச் சொந்தமான நிலம் போலச் சித்திரிக்கப்பட்டு கிரயம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
பழனி 2 கோடிக்கு கிரயம்
இதையடுத்து, இந்த நில மோசடிக்கு முழு உடந்தையாகவும் உறுதுணையாகவும் செயல்பட்ட பழனி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகியான முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை மற்றும் சேதுபதி ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அதுமட்டுமல்ல, இந்த முறைகேடு தொடர்பாகச் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகிய 2 பேரையும் அரசு உடனடியாகப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
வழக்கின் தீவிரத்தன்மை மற்றும் இதில் உள்ள பெருந்தொகை மோசடியைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கின் விசாரணையைச் சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் வழக்கை பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள்..
சார் பதிவாளர் விசாரணை
இதனிடையே, இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஹைகோர்ட் அவருக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இருந்தாலும், ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) தினமும் காலை 10:30 மணிக்கு சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையை விதித்தது.
போலி ஆவணங்கள்
நீதிமன்ற நிபந்தனையின்படி, திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் தென்மண்டல எஸ்.பி. சஜிதா தலைமையிலான அதிகாரிகள் முன்னிலையில் ஜஸ்டின் மணிகண்டன் ஆஜரானார். நேற்று முதல் நாள் விசாரணையின்போது, நிலத்தின் போலி ஆவணங்கள் தயாரிப்பு, விதியை மீறி நடத்தப்பட்ட பத்திரப்பதிவின் பின்னணி மற்றும் இந்த சதியில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சிபிசிஐடி DSP அஜய் தங்கம் தலைமையில், ஜஸ்டின் மணிகண்டனிடம் இன்று 2-வது நாளாகத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications
