நான் தான் இன்ஸ்பெக்டர்! போலீஸ் சீருடையில் சுற்றிய காங்கிரஸ் பிரமுகர் கைது! காரணத்த பாருங்களேன்!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் காவல் ஆய்வாளர் சீருடையில் புல்லட் பைக்கில் சுற்றிய வந்த மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கூறிய காரணம் வியப்படைய செய்துள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஜகவுக்கு போட்டியாக இதனை காங்கிரஸ் கட்சி முன்னெடுத்துள்ளது.
இதற்கான பணிகளில் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு திண்டுக்கல் மாவட்டமும் விதிவிலக்கல்ல. திண்டுக்கல் நிர்வாகிகளும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட தீவிரம் காட்டி வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர்
இந்நிலையில் தான் திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருப்பவர் துரை. மணிகண்டன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மாநகராட்சி எல்லைக்குட்டபட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு அனுமதி கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். இது பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

போலீஸ் சீருடையில் வலம்
இந்நிலையில் தான் காவல் ஆய்வாளர் சீருடையுடன் மணிகண்டன் புல்லட் பைக்கில் திண்டுக்கல்லில் வலம் வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீசார் மணிகண்டனை வழிமறித்து அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் சரியான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

அதிரடி கைது
இறுதியில் போலீசார் நடத்திய விசாரணையில் பொதுமக்கள் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக போலீஸ் சீருடையில் வலம் வந்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார். இதனை போலீசார் ஏற்கவில்லை. சாதாரண நபர் ஒருவர் பொதுவெளியில் போலீஸ் சீருடையை அணிந்து அனுமதியின்றி சுற்றுவது சட்டத்துக்கு புறம்பானது என்பதோடு தண்டனைக்குரியதாகும். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

விவாதத்துக்கு உள்ளான நபர்
இவர் இதற்கு முன்பும் சில விஷயங்களில் ஈடுபட்டு விவாதத்துக்கு உள்ளாகி உள்ளார். அதாவது காங்கிரஸ் கட்சியின் தலைமை அறிவிக்காத போதிலும் கூட விலைவாசி உயர்வுக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் தான் தற்போது போலீஸ் சீருடையில் பைக்கில் உலா வந்து கைதாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications