கணவனுடன் தகராறு.. விரக்தியில் குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை.... திண்டுக்கல் அருகே சோகம்
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கணவனுடன் அடிக்கடி ஏற்பட்ட தகராறில் விரக்தியடைந்த பெண் ஒருவர் இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
வத்தலகுண்டு அருகே 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு பெண்ணும் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அய்யம்பாளையத்தில் கிணற்றில் இருந்த தாய் மற்றும் 2 குழந்தைகளின் சடலங்களையும் கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குடும்பத்துடன் வசித்த காவலாளி
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே அய்யம்பாளையத்தை அடுத்த மருதாநதி ஆற்றுப்படுகையில் தென்னந்தோப்பு காவலாளியாக பணிபுரிந்து வருபவர் சரவணன். போதிய வருமானம் இல்லாத காரணத்தால் தென்னந்தோப்பிலேயே ஒரு குடிசை வீட்டில் மனைவி லட்சுமி, மகன் பாலசக்தி, மகள் விஸ்விதா ஆகியோருடன் வசித்து வந்தார். கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கணவனுடன் தகராறு
இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்னர் கணவன் மனைவி இடையே மீண்டும் சண்டை ஏற்பட குழந்தைகளை அழைத்துக் கொண்டு லட்சுமி வெளியில் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. கணவனும் அருகில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு தேடாமல் இருந்துள்ளார். 2 நாட்கள் ஆகியும் மனைவியிடம் இருந்து எந்த தகவலும் வராததால் சந்தேகம் அடைந்த சரவணன் 3 பேரையும் தேட ஆரம்பித்தார்.

கிணற்றில் 3 சடலங்கள்
இந்நிலையில் தென்னந்தோப்பு அருகே உள்ள விவசாயக் கிணற்றில் 3 பேரின் சடலங்கள் இருப்பதாக கேள்விப்பட்டு அங்கே சென்று பார்த்தார். கிணற்றில் விழுந்து இறந்து கிடப்பது தன்னுடைய மனைவியும் குழந்தைகளும்தான் என்பதை அறிந்த சரணவனன் கதறி அழுதார். இதை அடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றில் சடலமாக இருந்த 3 பேரையும் மீட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் 3 பேரின் சடலங்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 3 பேர் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த பட்டிவீரன்பட்டி போலீசார் கணவர் மற்றும் கிராம மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாய்க்கு மனநலம் பாதிப்பு
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் லட்சுமி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் இதனாலேயே அடிக்கடி கணவருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 நாட்களுக்கு முன்னர் வெளியே சென்ற லட்சுமி தனது குழந்தைகளைத் தூக்கி கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. தாய் மற்றும் 2 குழந்தைகள் சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. எந்த பிரச்சனைக்கு தற்கொலை என்பது தீர்வல்ல எனக் கூறும் தன்னார்வலர்கள் தற்கொலை செய்யும் எண்ணம் வந்தால் அதற்கென செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அணுகி உரிய ஆலோசனை பெற்றால் எப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்று கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications