செங்கல வச்சு மதுரைய..போர்டா வச்சு திண்டுக்கல்ல.. நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க -கலாய்த்து தள்ளிய உதயநிதி
திண்டுக்கல் : ஒற்றை செங்கல்லை வைத்து மதுரை என ஏமாற்றியது போல், திண்டுக்கல்லில் மாநகராட்சிக்கான எந்த கட்டமைப்பையும் ஏற்படுத்தாமல் ஒரேயொரு பலகை வைத்து மாநகராட்சி என ஏமாற்றி வந்தவர்களுக்கு சட்டமன்ற தேர்தல் போல் உள்ளாட்சி தேர்தலிலும் பாடம் புகட்ட வேண்டுமென திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சியான திமுகவும், எதிர்க் கட்சியாக உள்ள அதிமுகவும் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தங்களது பலத்தை நிரூபிக்க தயாராகி வருகின்றன. குறிப்பாக மாநகராட்சிகள், முக்கிய நகராட்சிகளை கைப்பற்றுவதில் இருவருக்கும் போட்டா போட்டி நிலவுகிறது.

பிரச்சாரம் தீவிரம்
வாக்குப்பதிவுக்கு நாட்கள் நெருங்கி வரும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் இதேபோல திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

உதயநிதி ஸ்டாலின்
இந்நிலையில் இன்று திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், 5 லட்சம் கோடி கடன் சுமையுடன் தமிழகத்தை அதிமுகவினர் விட்டு சென்றனர்.
திண்டுக்கல் மாநகராட்சியில் கட்டமைப்பு பணிகள் நடைபெறவில்லை. பெரிய கிராமமாக காட்சி அளிக்கிறது.10 ஆண்டுகளாக கவனிப்பாறற்று இருந்தது திண்டுக்கல் மாநகராட்சி. மக்கள் பணி செய்து முடிக்க திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அதிமுக ஜெயிக்காது
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி தான் வழி, 9 மாத கால ஆட்சியில் 10 கோடி தடுப்பூசி போட்டது திமுக அரசு. சொல்வதை செய்வோம் செய்வதை சொல்வோம் திமுக பதவியேற்ற போது காஜானா காலியாக இருந்தது, அதிமுக அனைத்தையும் காலி செய்துவிட்டது. 5 இலட்சம் கோடி கடன் வைத்துவிட்டு சென்றது. விரைவில் குடும்ப அட்டைதார் பெண்களுக்கு மாதத்தோறும் ரூ 1000 வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் அறிவிப்பார். எடப்பாடி பழனிச்சாமிக்கு தைரியம் தெம்பு இருந்தால் சட்டமன்றத்தில் முடக்கி பாருங்கள் இது மாதிரி செய்தால் ஒரு இடத்தில் கூட அதிமுக ஜெயிக்காது. திமுக ஆட்சி மக்களை நேரில் சந்தித்து மக்களாட்சி நடத்தி வருகிறது.

திண்டுக்கல்லுக்கு ஏமாற்றம்
ஒற்றை செங்கல்லை வைத்து மதுரை எய்ம்ஸ் என ஏமாற்றியது போல்,திண்டுக்கல்லில் மாநகராட்சிக்கான எந்த கட்டமைப்பையும் ஏற்படுத்தாமல் ஒரேயொரு பலகை வைத்து மாநகராட்சி என ஏமாற்றி வந்த அடிமைகளுக்கு சட்டமன்ற தேர்தல் போல் உள்ளாட்சி தேர்தலிலும் பாடம் புகட்ட வேண்டும், திண்டுக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு நடக்கும் முதல் மாநகராட்சி தேர்தல். இங்குள்ள 48 வேட்பாளர்களில் ஒரு பெண், முதல் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நல்ல திட்டங்கள் வேண்டும் என்றால் திமுக வேட்பாளர்களை ஆதரியுங்கள்", என உதயநிதி பேசினார்.












Click it and Unblock the Notifications