சிஎஸ்கே vs கேகேஆர்.. 2 டீமில் மொத்தம் 6 பேர்.. ஐபிஎல் கப் யாருக்குன்னு தீர்மானிக்க போறது இவுங்கதான்!
துபாய்: சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையே இன்று இரவு நடைபெறும் ஐபிஎல் பைனல் போட்டியில் 3 முக்கிய சவால்கள் உள்ளன. அந்த மூன்றிலும் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
Recommended Video
3 சவால்கள் என்பதை 3 வீரர்கள் இடையேயான சவால்கள் என்று வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் இந்த 3 வீரர்களும், ஒருவருக்கொருவர் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதை வைத்துதான், போட்டியின் ரிசல்ட் அமையப்போகிறது.
யார் அவர்கள்.. இதோ விவரம்:

ருத்துராஜ் vs பெர்குசன்
நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார் ருத்துராஜ் கெய்க்வாட். 15 போட்டிகளில் 603 ரன்களை விளாசியுள்ளார் அவர். சராசரி ரன் குவிப்பு 46 என்ற அளவுக்கு சிறப்பாக உள்ளது. குவாலிபையர்-1 ரவுண்டில் டெல்லிக்கு எதிராக 50 பந்துகளில் 70 ரன்களை குவித்தார் ருத்துராஜ் கெய்க்வாட்.

சிறப்பான ஓப்பனிங்
கேகேஆர் அணிக்கு எதிராக இந்த சீசனில் இரு முறை ஆடியுள்ளார் ருத்துராஜ் கெய்க்வாட். 42 பந்துகளில் 64 மற்றும் 28 பந்துகளில் 40 ரன்களை அவர் விளாசினார். ருத்துராஜை பெரும்பாலான பந்து வீச்சாளர்களால் அச்சுறுத்த முடியவில்லை. இருப்பினும், கேகேஆர் அணியின், பெர்குசன் பவுன்சர்களை சந்திப்பதில் சற்று தடுமாற்றம் இருந்ததை கவனிக்க முடிந்தது. அவரை சமாளித்து ருத்துராஜ் கெய்க்வாட் பவர்பிளேயில் வழக்கம்போல ரன் குவித்தால் வெற்றி நமதே, என்கிறார்கள் சிஎஸ்கே ரசிகர்கள்.

ஜோஷ் ஹசில்வுட் vs சுப்மன் கில்
ஐபிஎல் 2021 இரண்டாவது பாதியில் தீபக் சகர் பெரும் அச்சுறுத்தலாக இல்லாமல் போயிருக்கலாம், ஆனால் ஜோஸ் ஹசில்வுட் பந்து வீச்சின் முக்கிய பலமாக உள்ளார். ஆரம்பத்திலேயே எதிரணிகள் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் சிஎஸ்கேவிற்கு முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பவர் ஹசில்வுட். கேகேஆர் ஓப்பனிங் பேட்ஸ்மேன் சுப்மன் கில்லை தூக்குவதற்கு ஹசில்வுட்டை நம்பியுள்ளது சிஎஸ்கே. கடந்த 5 போட்டிகளில் 3 அரை சதங்கள் அடித்துள்ளார் சுப்மன் கில். கடந்த போட்டியில் டெல்லிக்கு எதிராக 46 ரன்கள் எடுத்தார்.

வருண் சக்கரவர்த்தி vs தோனி
ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தியை தோனி எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இரு தரப்பு ரசிகர்களிடமும் உள்ளது. டெல்லி கேப்பிடல்சுக்கு எதிராக கடைசி ஓவரில் 3 பவுண்டரி அடித்து சிஎஸ்கே வெற்றிக் கனியை பறிக்க உதவினார் தோனி. எனவே கேகேஆருக்கு எதிராக தோனியும், அச்சுறுத்த கூடும்.

ஸ்பின் பந்து வீச்சு
தோனி சமீப காலமாக ஸ்பின் பந்துகளுக்கு ரொம்பவே திணறுகிறார். கடந்த ஐபிஎல் சீசன் முதல் இப்போது வரை வருண் சக்கரவர்த்தியின் ஸ்பின் தோனிக்கு கூடுதல் தொல்லையாக இருந்துள்ளது. 4 முறை வருண் சக்கரவர்த்தியை எதிர்கொண்ட தோனி, 3 முறை அவரது பந்து வீச்சில் அவுட்டாகியுள்ளார். எனவே தோனி வருகைக்காக வருண் சக்கரவர்த்திக்கு சில ஓவர்களை ஒதுக்கி மோர்கன் காத்திருக்க வாய்ப்பு உள்ளது.

ரசிகர்கள் ஆர்வம்
இந்த வீரர்கள் இடையேயான போட்டி சிஎஸ்கே கேகேஆர் போட்டியில் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இதில் யார் கை ஓங்குகிறதோ அவர்களுக்கே ஐபிஎல் கோப்பை வசமாகும் என்பதால், ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications