ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் போட்டி? அதிமுகவா, தமாகாவா? யுவராஜா சொன்ன விளக்கம்!
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவால், அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிமுக கூட்டணியில் மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதி யாருக்கு ஒதுக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட தமாகாவின் யுவராஜா, மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் போட்டியிட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4ம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவு காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறவுள்ள முதல் சட்டமன்ற இடைத்தேர்தல் இதுவாகும்.

ஈரோடு கிழக்கு தொகுதி
கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரைமைப்பின்போது புதிதாக உருவாக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி இதுவரை மூன்று சட்டப்பேரவை தேர்தல்களைச் சந்தித்துள்ளது. இதில் 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு தேர்தல்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. இரண்டு முறை தவறவிட்ட ஈரோடு கிழக்கு தொகுதியை கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கைப்பற்றியது.

திருமகன் ஈவெரா மறைவு
முதல்முறையாக எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார் திருமகன் ஈவெரா. இந்நிலையில், அடுத்து வரவிருக்கும் இடைத்தேர்தலில் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த தேர்தலில் மறைந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர் திருமகன் ஈவெராவை எதிர்த்து தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக யுவராஜா போட்டியிட்டார்.

திமுக பற்றி யுவராஜா
இதனால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி செயலாளரான யுவராஜாவுக்கு மீண்டும் அதிமுக கூட்டணி சார்பாக வாய்ப்பு அளிக்கப்படுமா அல்லது அதிமுக நேரடியாக களமிறங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து யுவராஜா கூறுகையில், திமுக தற்போது வரை ஆளுநரை வைத்து அரசியல் செய்து வருகிறது. தேர்தல் வரும்போது எல்லாம் திமுக தமிழை வைத்து நாடகமாடி வருகிறது என்று தெரிவித்தார்.

இடைத்தேர்தலில் போட்டியா?
தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பற்றிய கேள்விக்கு, ஈரோடு கிழக்குத் தொகுதியில், துரதிஷ்டவசமாக இடைத்தேர்தல் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலில், இந்தத் தொகுதியில் போட்டியிட்டதன் அடிப்படையில், மீண்டும் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன். அதுகுறித்து எங்கள் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், கூட்டணிக் கட்சித் தலைவர், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சு வார்த்தை நடத்துவார். அந்த முடிவின்படி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும். தேர்தலைச் சந்திக்க நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications