உங்களுக்கு இங்க ஓட்டு இருக்கா? - பீகார் மாநில தொழிலாளியிடம் வாக்கு சேகரித்த துரை வைகோ.. ருசிகரம்!
வீதி வீதியாக நடந்து சென்று இன்று வாக்கு சேகரித்தார் துரை வைகோ.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த டீக்கடை ஊழியர் ஒருவரிடம் உங்களுக்கு ஓட்டு இருக்கா? எனக் கேட்டு அவரிடம் வாக்கு சேகரித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், முக்கிய அரசியல் தலைவர்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளதால், ஈரோடு கிழக்கில் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது.
இன்று மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஈரோட்டில் பரபர பிரச்சாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் நடைபெறுகிறது. இதில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சாபில் மேனகா நவநீதன் என சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 77 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களை ஆதரித்து, அந்தந்த கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று முக்கிய தலைவர்கள் பரப்புரை
திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அனைத்து மாவட்ட திமுக நிர்வாகிகளும் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று ஈரோட்டில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன், மதிமுக தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் இன்று பிரசாரம் செய்கின்றனர்.

துரை வைகோ பிரச்சாரம்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஈபிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, அந்த தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு பேருந்து நிலையம், சக்தி ரோடு, கருங்கல்பாளையம், எல்லை மாரியம்மன் கோவில், பூங்கா சாலை உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பீகார் நபரிடம்
பிரச்சாரத்தின்போது டீக்கடை ஒன்றில் இருந்த ஊழியரிடம் வியாபாரம் எல்லாம் எப்படி போகுது? இடைத்தேர்தல் வந்ததால் உங்களுக்கு நல்ல வியாபாரம் தான் எனச் சிரித்தபடி கேட்டார் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ. டீக்கடை ஊழியரிடம் சொந்த மாநிலம் எது எனக் கேட்க அவர் பீகார் எனத் தெரிவித்தார். பின்னர் எத்தனை வருசமா இங்க இருக்கீங்க? இங்கே ஓட்டு வந்துருச்சா என விசாரித்தார். அந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஊழியரும், தனக்கு வாக்கு இங்கே இருக்கிறது எனச் சொல்லவே, அவரிடம் நோட்டீஸை வழங்கி, கை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications