தரங்கெட்ட பேச்சு.. மதவாத சக்திகளுக்கு துணைபோகும் அதிமுகவுக்கு நல்ல பாடம் கிட்டும்.. துரை வைகோ சுளீர்
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவை மக்கள் புறக்கணிப்பார்கள் என துரை வைகோ தெரிவித்துள்ளார்.
ஈரோடு : "மதவாதத்தால் வஞ்சிக்கும் பாஜகவையும், அதற்கு துணை போகும் அதிமுகவையும் புறக்கணிக்க வேண்டும். இந்த இடைத்தேர்தலில் மதவாத சக்திகளுக்கு துணை போகும் அதிமுகவுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் தக்க பாடத்தைப் புகட்டுவார்கள்" என மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில், இன்று மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், சக்தி ரோடு, கருங்கல்பாளையம், எல்லை மாரியம்மன் கோவில், பூங்கா சாலை உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

மாதம் 1000 ரூபாய்
இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ, "தேர்தல் வாக்குறுதிகளில் பலவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார். இருந்தபோதிலும் எதிர்க்கட்சிகள் குறிப்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜகவினர், திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற பொய்யான குற்றச்சாட்டை தொடர்ந்து சொல்லி வருகின்றனர். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். கடுமையான சவாலான சூழ்நிலையில் இவ்வளவு திட்டங்களை நிறைவேற்றிய தமிழ்நாடு அரசு அடுத்து குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தையும் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.

சில மாதங்களில்
2006இல் ஈரோட்டில் இருந்த கடுமையான போக்குவரத்து நெரிசலை தடுக்க ஈரோடு பெருந்துறை - காங்கயம் புறவழிச்சாலை, ரிங் ரோடு திட்டத்தை கருணாநிதி ஆட்சியில் கொண்டு வந்தார்கள். கடந்த பத்தாண்டு காலத்தில் அதற்கான பணிகள் தாமதித்ததால் இன்று வரை முழுமையாக அது செயல்பாட்டுக்கு வரவில்லை. தற்போது திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அடுத்த சில மாதங்களில் அந்தத் திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும். அதிமுக தான் திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை முடக்கினர்.

70 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றம்
முன்னாள் முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டிய திட்டங்கள் கொண்டு வந்த திட்டங்களை அதிமுகவினர் செயல்படுத்தவில்லை. அதிமுக குற்றச்சாட்டு வைப்பதைப்போல் இல்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த சில திட்டங்களில் குறைபாடு இருந்தது. அதனால் அந்த திட்டங்களில் சிலவற்றை தற்போதைய அரசு மாற்றியுள்ளது. அதோடு சிறப்பான புதிய திட்டங்களை திமுக அரசு கொண்டு வந்துள்ளது. என்னைப் பொறுத்தவரை தமிழ்நாடு முதலமைச்சர் 70 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்.

தரங்கெட்ட தாக்குதல்கள்
ஒருபுறம் கொரோனா, மற்றொருபுறம் நிதி நெருக்கடி, மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமை இதற்கெல்லாம் மத்தியில் எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி உள்ளது. இவ்வளவு சிரமமான சூழ்நிலையிலும் சிறந்த நல்ல திட்டங்களை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜகவினர் தொடர்ந்து அவதூறுகளை சொல்லி வருகிறார்கள். தரங்கெட்ட அரசியல் தாக்குதல்கள், கருத்துகள் சொல்வதை நான் என்றைக்கும் விரும்புவது கிடையாது. அவர்கள் சொல்லும் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை.

மதவாத சக்திகள்
மதவாதத்தால் வஞ்சிக்கும் பாஜகவையும், அதற்கு துணை போகும் அதிமுகவையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும். மதவாத சக்திகளுக்கு துணை போகும் அதிமுகவுக்கு இந்த இடைத்தேர்தலில் தக்க பாடத்தை இந்த ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் புகட்டுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கம் தழைத்திட சிறந்த மக்கள் பணிகள் தொடங்கிட திமுக கூட்டணியின் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்." என துரை வைகோ கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications