எடப்பாடி மாதிரி நிறைய பேர் ‘அந்த’ கட்சியில்.. ஜெயக்குமாருக்கு ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பதிலடி!
ஈரோடு : "ஓபிஎஸ் இல்லையென்றால் சர்வாதிகாரி எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கைப்பற்றியிருப்பார். ஜெயக்குமார் அதனை விற்றிருப்பார். சொந்த தொகுதியிலேயே தோல்வியடைந்த ஜெயக்குமாருக்கு ஓபிஎஸ் பற்றி பேச தகுதியே இல்லை" என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சசிகலாவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், டி.டி.வி.தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை வேண்டுமானால் சசிகலா ஒருங்கிணைத்து மூவரும் ஒரு தனிக் கட்சி ஆரம்பிக்கலாம் ஓபிஎஸ்ஸுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கடுமையாகப் பேசினார்.
இந்நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, "ஓபிஎஸ் இல்லாமல் அதிமுகவை நினைத்து கூட பார்க்க முடியாது." எனத் தெரிவித்துள்ளார்.

சசிகலா - ஜெயக்குமார்
திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றால், அதிமுக ஒன்றுபட வேண்டும், அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும், விரைவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியை சந்திப்பேன் என சசிகலா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். அதற்கு ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் வேண்டுமானால் இணைத்து தனிக் கட்சி தொடங்கட்டும், எங்கள் கட்சி விவகாரத்தில் சசிகலா மூக்கை நுழைக்க வேண்டாம் என ஈபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தெரிவித்தார்.

புகழேந்தி பதிலடி
அதற்கு பதிலளிக்கும் விதமாக ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, "திராவிட இயக்கத்தை கட்டிக் காத்தவர் ஓபிஎஸ். ஓபிஎஸ் இல்லையெனில் சர்வாதிகாரியான எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கைப்பற்றி இருப்பார். ஜெயக்குமார் அதனை வழிநெடுக விற்றுவிட்டுச் சென்று இருப்பார். சொந்த தொகுதியில் கூட தோற்ற ஜெயக்குமாருக்கு எல்லாம் பேச தகுதியே இல்லை. கட்சித் தொண்டர்கள் தான் அதிமுகவின் உரிமையாளர்கள். அவர்கள் ஓபிஎஸ்ஸுக்கு பட்டா கொடுத்து உள்ள நிலையில் புறம்போக்கு எல்லாம் பேசக்கூடாது." எனத் தெரிவித்தார்.

பட்டா ஓபிஎஸ்ஸுக்கு
மேலும், "அதிமுக சட்ட விதிகள் சாதாரண தொண்டர்களுக்குக் கூட தெரியும். பண பலம் படைத்தவன் நாற்காலியை வாரி விடுவான் என்று தெரிந்து தான் ஞானி எம்ஜிஆர் அப்படியான சட்ட விதிகளை வகுத்துள்ளார். ஓபிஎஸ் இல்லாமல் அதிமுகவை நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஓபிஎஸ் தலைமை அலுவலகத்திற்குச் செல்ல முடியும். ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக செல்லாமல் உள்ளார். அதிமுக ஓபிஎஸ் வசம் செல்லும்போது மாபெரும் கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளது. அப்போது எடப்பாடி பழனிசாமியை ஓரங்கட்டிவிட்டு அனைவரும் அதிமுகவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கலாம்." எனத் தெரிவித்தார்.

திமுகவிலும் எடப்பாடி பழனிசாமிகள்
தொடர்ந்து பேசிய புகழேந்தி, "எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள் திமுகவில் நிறைய பேர் இருப்பார்கள் என்பதை திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் உணர்ந்ததால் தான் தனது மகன் உதயநிதியை அமைச்சராக கொண்டு வந்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாகத்தான் வரும். அதிமுகவின் முழு பொறுப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்வார்." என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications