இடைத்தேர்தல்: “ஃபைனல்” ரேஸில் 3 பேர். ‘டிக்’ அடித்த எடப்பாடி! யார் நின்றால் வெற்றி வாய்ப்பு அதிகம்?
இடைத்தேர்தலில் தனது அணி சார்பில் வேட்பாளருக்கு 3 பேர் ரேஸில் இருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி ஒருவரை டிக் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியின் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கேவி ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு, அதிமுக மாணவரணி இணை செயலாளர் நந்தகோபால் ஆகிய மூவரில் ஒருவர் நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த 3 பேரில் யார் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற கோணத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி ஒருவரின் பெயரை 'டிக்' அடித்துள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்தில் திமுக கூட்டணி வேட்பாளரை அறிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு அணிகளும் களமிறங்குகின்றன.
இரு அணியிலும் இன்னும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை. இன்றோ நாளையோ வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது.

காங்கிரஸ் - அதிமுக
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சி காங்கிரஸுக்கு தொகுதியை ஒதுக்கியது. காங்கிரஸ் கட்சி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வேட்பாளராக அறிவித்து களப்பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. திமுக, அமைச்சர்களைக் களமிறக்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. எதிரணியான அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் முட்டி மோதி வருகிறார்கள். அதிமுகவின் இரு அணிகளும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடத் தயாராகி வருகின்றன.

களத்தில் 6 பேர்
மேலும் இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல அமமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு வேட்பாளர்களும்ம் அறிவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. பாமக தேர்தலில் போட்டியிடப்போவதில்லை, யாருக்கும் ஆதரவு இல்லை என்று அறிவித்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் பிரதான கட்சிகளைச் சேர்ந்த 6 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.

ஆதரவு கோரும் ஈபிஎஸ் - ஓபிஎஸ்
இடைத்தேர்தலில் எடப்பாடி தலைமையிலான அணியினர் பாஜக, தமாகா ஜிகே வாசன், புரட்சி பாரதம் ஜெகன் மூர்த்தி, புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஜான்பாண்டியன் உள்ளிட்ட கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டனர். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணியினரும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரினார். யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து பாஜக இன்னும் தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

நாங்களும் களத்தில்
இந்த நிலையில் நாங்களும் தேர்தல் களத்தில் இறங்கிவிட்டோம் என அதிமுக தேர்தல் பணிமனையைத் திறந்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழுவை அமைத்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். நேற்று ஈரோட்டுக்கு நேரில் வந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் உயர்மட்ட நிர்வாகிகளோடும் ஈரோடு மாவட்ட அதிமுகவினரோடும் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி, விரைவாக நாம் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், அனைத்து தேர்தல் செலவுகளையும் 3 மாஜி அமைச்சர்கள் பொறுப்பு ஏற்றுக்கொள்வார்கள் என்றும் முடிவு செய்யப்பட்டு, ஈபிஎஸ்ஸே அதனை அங்கே அறிவித்திருக்கிறார்.

இரண்டாவது நாளாக - ரேஸில் 3 பேர்
இன்று ஈரோட்டில் அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இரண்டாவது நாளாக ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி தரப்பு இறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னரசு, ராமலிங்கம், நந்தகுமார் ஆகிய மூன்று பேர் இறுதிகட்ட தேர்வில் இருப்பதாகவும், அவர்களில் ஒருவரே வேட்பாளராக அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டது. இந்த 3 பேரில் யார் களமிறங்கினால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற கோணத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி ஒரு பெயரை இறுதி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இறுதி வேட்பாளர்
இதில், அதிமுக முன்னாள் எம்எல்ஏவான தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் தற்போது மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாரளாக இருக்கிறார். மேலும், முன்னாள் அமைச்சர் கேவி ராமலிங்கம் அல்லது மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் நந்தகுமார் ஆகியோரில் ஒருவரும் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த பட்டியலில் எடப்பாடி 'டிக்' அடித்துள்ளது யார் பெயரை என்பது இன்றோ நாளையோ உறுதியாகத் தெரியவரும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications