ரயிலில் 100 ஆண்கள்.. "பயமா இருக்குடி".. நள்ளிரவில் தோழிக்கு டான்சர் பெண் மெசேஜ்.. காலையில் அதிர்ச்சி
சென்னை: அசாம் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஹிமாஸ்ரீ போரா, ரயிலில் பயணம் செய்துள்ளார்.. அப்போது தன்னை சுற்றி நிறைய ஆண்கள் இருப்பதாகவும், பயமாக இருப்பதாகவும் தோழியிடம் கூறியிருந்தார். ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் அந்த இளம்பெண்ணை தொடர்புகொள்ள முடியவில்லை. மறுநாள் ஆந்திராவில் ரயில் தண்டவாளம் அருகே அவரது உடல் தான் கண்டெடுக்கப்பட்டது. என்ன நடந்தது இளம்பெண்ணுக்கு?
அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த ஹிமாஸ்ரீ போரா.. 23 வயதாகிறது.. இவர் ஒரு கல்லூரி மாணவி ஆவார்.. டான்ஸ் கலைஞரும் ஆவார்.. நடன குழுவினருடன் ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றிருந்தார். அங்கிருந்து சொந்த ஊருக்குத் திரும்பியபோதுதான் இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது..

டான்ஸர் - கல்லூரி மாணவி
கடந்த அக்டோபர் 6-ம் தேதி இரவு, விசாகப்பட்டினத்திலிருந்து கவுகாத்தி செல்வதற்காக விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளார் ஹிமாஸ்ரீ... அவருக்கு கல்லூரி தேர்வு இருந்ததால், டான்ஸ் குழுவில் இருந்த மற்றவர்களுக்கு முன்பாகவே, தனியாக கிளம்பிவிட்டார் ஹிமாஸ்ரீ.. ஆனாலும் ரயில் புறப்படுவதற்கு முன்பாகவே அவரால் ஸ்டேஷனுக்கு போகவில்லை.. அதனால் அவசர அவசரமாகத்தான் ரயிலை பிடித்தார்..
ஆனால் கடைசி நேரத்தில் அன்ரிசர்வ்டு பெட்டியில் ஏறிவிட்டார்.. அந்தப் பெட்டியில் ஏற்கனவே கூட்டம் நிரம்பி வழிந்தது.. பரீட்சை எழுத வேண்டுமே என்பதற்காக, வேறு வழியில்லாமல் ஏறிவிட்டார்..
சுற்றிலும் ஆண்கள்
அப்போதுதான் தன்னை சுற்றிலும் நிறைய ஆண்கள் இருப்பதை கவனித்தார் ஹிமாஸ்ரீ.. ரயிலில் ஏறிய பிறகு இரவு சுமார் 2 மணியளவில் தோழிக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பியிருக்கிறார் ஹிமாஸ்ரீ.. தன்னைச் சுற்றி நிறைய ஆண்கள் இருப்பதாகவும், தனக்கு ரொம்ப பயமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல சீட் கிடைக்காமல், நின்றபடியே பயணித்து வருவதாகவும், அசௌகரியமாக உணர்வதாகவும் மெசேஜ்ஜில் தெரிவித்திருந்தார்.. அத்துடன் ரயில் பெட்டியின் உள்ளே இருந்த சூழலைக் காட்டும் வீடியோ ஒன்றையும் தோழிக்கு ஷேர் செய்திருந்தார்..
அதன்பிறகு இளம்பெண்ணின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனது. குடும்பத்தினரும் நண்பர்களும் அவரைத் தொடர்புகொள்ள முடியாமல் தவித்தனர். ரயில்வே உதவி எண் 139-க்கும் புகாரும் தந்தனர்.. ஆனால், ரயில்வே பாதுகாப்புப் படையினர் ஸ்ரீகாகுளம் ரோடு ரயில்வே ஸ்டேஷனில், அன்ரிசர்வ்டு பெட்டிகளில் தேடியும் ஹிமாஸ்ரீயைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்
மறுநாள், அக்டோபர் 7-ம் தேதி, ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ரயில் தண்டவாளம் அருகே அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. பிறகு பெற்றோர் அடையாளம் காட்டியதைத் தொடர்ந்து, அது ஹிமாஸ்ரீயின் உடல் என்பது உறுதியானது..
பிறகு ஹிமாஸ்ரீயின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்து, ரிப்போர்ட்டும் வந்தது.. அதில், உடல் ரீதியான வன்முறை மற்றும் பாலியல் வன்முறைக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லையாம்.. அதாவது பாலியல் வன்கொடுமை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்துக்கு மருத்துவ அறிக்கையில் ஆதாரம் கிடைக்கவில்லை என்கிறார்கள் போலீசார்..
ஆனால், அதே நேரத்தில், இதை வைத்து ஹிமாஸ்ரீயின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதை இப்போதைக்கு முடிவு செய்ய முடியவில்லை என்றும் போலீஸ் கூறியுள்ளது.
அபாய சங்கிலி எங்கே
தொடர்ந்து போலீஸார் சொல்லும்போது, "ரயில் பெட்டியில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்திருக்கிறார்கள்.. கடைசி நேரத்தில் இளம்பெண் ஏறியிருக்கிறார்.. பெட்டிக்குள் செல்ல முடியாமல் வாசல் அருகே நின்றிருக்கலாம்.. ஹிமாஸ்ரீ தற்செயலாக ரயிலில் இருந்து தவறி விழுந்தாரா, அல்லது வேறு ஏதாவது நடந்ததா என்பது இன்னும் உறுதியாகவில்லை.
ரயிலில் இருந்து அவர் கீழே விழுந்திருந்தால், ஏன் யாரும் அபாய சங்கிலியை பிடித்து ரயிலை நிறுத்தவில்லை.. எனவே, ரயிலில் பயணம் செய்தவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியிருக்கிறது.. அத்துடன் சிசிடிவி காட்சிகள், செல்போன் மெசேஜ், வீடியோ, மெசேஜ்கள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்களையும் ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது" என்கிறார்கள்.
திணறும் போலீஸ்
ஆனால் ஹிமாஸ்ரீயின் குடும்பத்தினர் இந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவும் ஆந்திர முதலமைச்சர் மற்றும் ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதி, பாரபட்சமற்ற விசாரணை நடத்தக் கோரியுள்ளார்..
எனினும், அந்த பெண் ரயிலில் இருந்து எப்படி கீழே விழுந்தார்? அங்கு என்ன நடந்தது? உதவி கேட்கப்பட்டபோது அவரைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது ஏன்? அந்த பெண் எப்படித்தான் இறந்தாரு? என்பதற்கெல்லாம் இன்னும் பதில் கிடைக்கவில்லை.. இதனால் ஆந்திர போலீசார் திணறி கொண்டிருக்கிறார்கள்..!!


Click it and Unblock the Notifications
