இனி சினிமா டிக்கெட் விலை ரூ.300.. அதிக பட்ஜெட் படங்களுக்கு கட்டணத்தை உயர்த்தவும் அரசு அனுமதி!
ஹைதராபாத்: தெலங்கானாவில் சினிமா டிக்கெட் கட்டணம் மற்றும் காட்சிகளுக்கான புதிய விதிமுறைகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. திரையரங்குகளின் வகைக்கு ஏற்ப டிக்கெட்டுகளுக்கு குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை ஒரு தரப்பினர் வரவேற்றாலும் மற்றொரு தரப்பினர் எதிர்த்து வருகிறார்கள்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சினிமா கட்டணம் குறைவாக இருப்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே தெலுங்கானா அம்மாநில அரசு சினிமா தியேட்டர்களுக்கு புதிய கட்டணத்தை அறிவித்துள்ளது.

புதிய கட்டணம்
அதன்படி ஏசி இல்லாத தியேட்டர்களில் வழக்கமான டிக்கெட் ரூ.30 முதல் ரூ.70 வரையிலும், ப்ரீமியம் டிக்கெட் ரூ.50 முதல் ரூ.100 வரையிலும் இருக்கலாம். ஏசி திரையரங்குகளில் வழக்கமா டிக்கெட் ரூ.50 முதல் ரூ.150 வரையிலும், ப்ரீமியம் டிக்கெட் ரூ.100 முதல் ரூ.200 வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகளில் ஸ்பெஷல் தியேட்டர் என்ற புதிய பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தியேட்டர்களில் நான் ப்ரீமியம் டிக்கெட்டுக்கு ரூ.100 முதல் ரூ.250 வரையும், ரிக்லைனர் வசதி கொண்ட சீட்களுக்கு ரூ.200 முதல் ரூ.300 வரையும் கட்டணம் வசூலிக்கலாம். மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு இதேபோன்ற கட்டண வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அங்கு ரெகுலர் டிக்கெட் ரூ.100 முதல் ரூ.250 வரையிலும், ரிக்லைனர் வசதி கொண்ட சீட்களுக்கு ரூ.200 முதல் ரூ.300 வரையிலும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஸ்பெஷல் தியேட்டர்
7.1, 2K அல்லது 4K வசதி கொண்ட தியேட்டர்கள் மற்றும் குறைந்தது 75 அடி அகலம் கொண்ட திரை கொண்ட தியேட்டர்களுக்கு இந்த ஸ்பெஷல் தியேட்டர் பிரிவில் சேர்க்கப்படும். இதனால் நவீன வசதிகளைக் கொண்ட சில பிரபல சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களும் இனிமேல் அதிகபட்சமாக ரூ.300 வரை கட்டணம் வசூலிக்க முடியும்.
மேலும், தியேட்டர் ஷோ டைம் சார்ந்தும் புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு தியேட்டரும் தினசரி அதிகபட்சம் 5 காட்சிகளை திரையிடலாம். காலை 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை காட்சிகளை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் காலை 11 மணி முதல் இரவு 9 மணிக்குள் குறைந்தது ஒரு ஷோ குறைந்த பட்ஜெட் திரைப்படத்துக்காக ஒதுக்கப்பட வேண்டும். பண்டிகை காலங்களிலும் சிறிய பட்ஜெட் படங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
சூப்பர் ஹை பட்ஜெட் படங்கள்
ரூ.100 கோடிக்கு மேல் பட்ஜெட் கொண்ட திரைப்படங்கள் சூப்பர் ஹை பட்ஜெட் படங்களாக வகைப்படுத்தப்படும். இதுபோன்ற படங்களுக்கு டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி கொள்ள தயாரிப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த கட்டண உயர்வு படம் வெளியான முதல் 10 நாட்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும், சினிமா தொழிலாளர்கள் நலசங்கத்திற்கு ரூ.1 கோடி நிதி வழங்கும் திரைப்படங்களுக்கும் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா அரசு
சினிமா கட்டண உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக.. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ஒவ்வொரு திரையிலும் 25% இருக்கைகள் குறைந்த கட்டணத்தில் ஒதுக்கப்பட வேண்டும் என தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆன்லைன் டிக்கெட் புக்கிங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. AC திரையரங்குகளில் ஒரு டிக்கெட்டுக்கு 5 ரூபாயும், நான் ஏசி திரையரங்குகளில் 3 ரூபாயும் மட்டுமே கன்வீனியன்ஸ் கட்டணமாக வசூலிக்க முடியும்.


Click it and Unblock the Notifications
