"12 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை".. பிரபலம் ஆனதால் இப்படி நடக்கிறது.. நொந்து போன விஜய் தேவரகொண்டா
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா. கடந்த 2011 ஆம் ஆண்டு 'நுவ்விலா' என்ற படத்தின் மூலம் அறிமுகமான விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.
கீதா கோவிந்தம் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் விஜய் தேவரகொண்ட நடித்துள்ளார்.
கர்நாடக மாஜி முதல்வர் சித்தராமையாவின் பயோபிக்.. விஜய் சேதுபதியை நடிக்க வைக்க திட்டம்! வெளியான தகவல்

கீதா கோவிந்தம் திரைப்படம்
தெலுங்கு மட்டும் அல்லாது இந்தியா முழுவதும் அதிக ரசிகர்களை கொண்ட ஒரு முன்னணி நடிகராக விஜய் தேவரகொண்டா வலம் வருகிறார். விஜய் தேவரகொண்டா நடித்த கீதா கோவிந்தம் படம் தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் பிரபலம் ஆனது. சாதாரண பின்னணியை கொண்ட விஜய் தேவரகொண்டா இப்போது பல கோடிகளில் சம்பளம் பெறுவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இந்தி திரையுலகிலும் கால் பதிக்கும் வகையில் லைகர் என்ற இந்தி திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்தார்.

லைகர் திரைப்படம்
பிரபல இயக்குனராக பூரி ஜெகன் நாத் இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி வெளியாகியிருந்தது. இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. பெரும் பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாரான இந்தப் படத்திற்கு ரூ125 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசனும் நடித்து இருந்தார்.

விஜய் தேவரகொண்டாவிடம் விசாரணை
லைகர் படம் தயாரிப்புக்காக செய்யப்பட்ட முதலீட்டில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ளது. ஹவாலா பணம் இந்தப் படம் தயாரிப்புக்காக வந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. படத்தின் தயாரிப்பாளரான சர்மி, இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இது ஒரு அனுபவம்
ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெற்றது. சுமார் 12 மணி நேரம் விஜய் தேவரகொண்டாவிடம் விசாரணை நீடித்தது. அமலாக்கத்துறை விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா, "பிரபலம் அடைவதன் மூலம் சில பிரச்சினைகள், சில பின்விளைவுகளும் ஏற்படுகின்றன. இது ஒரு அனுபவம்.. இதுதான் வாழ்க்கை.. எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதும் நான் என் கடமையை செய்தேன்.

மீண்டும் என்னை அழைக்க மாட்டார்கள்
அமலாக்கத்துறை முன்பாக ஆஜராகி அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தேன். அவர்கள் (அமலாக்கத்துறை) மீண்டும் என்னை அழைக்க மாட்டார்கள்" என்றார். காலை 8 மணி அளவில் விசாரணைக்கு ஆஜரான விஜய் தேவரகொண்டா இரவு 8.30 மணிக்கே விசாரணை முடிந்து வெளியே வந்தார். சுமார் 12 மணி நேரம் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.