"ஒரு மணி நேரத்தில் நிச்சயதார்த்தம்.. வீட்டில் நுழைந்த 100 இளைஞர்கள்! பெண்ணை கடத்தி.." ஷாக் சம்பவம்
ஹைதராபாத்: தெலங்கானாவில் பெண் ஒருவருக்கு நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த நிலையில், 100க்கும் மேற்பட்ட ஆண்கள் மடமடவென அவர்கள் வீட்டில் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதிலும் காதல் அல்லது ஒரு தலைக் காதல் விவகாரம் காரணமாகப் பெண்கள் மீது நடத்தப்படும் வனத்துறைகள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், ஒருதலை காதல் விவகாரத்தில் சதீஷ் என்ற இளைஞர் சத்யா என்ற பெண்ணை பரங்கிமலையில் ரயில் நிலையத்தில் ரயிலில் தள்ளி கொலை செய்தார். இதில் அதிர்ச்சியடைந்த சத்யாவின் தாயாரும் தற்கொலை செய்து கொண்டார்.
பெரிய சிக்கல்! பாஜக டாப் தலைவர் பிஎல்.சந்தோஷுக்கு பறந்த பரபர சம்மன்! தெலங்கானாவில் பெரிய ஆக்ஷன்

தெலங்கானா
இந்தச் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இதற்கிடையே தெலங்கானா மாநிலத்தில் ஒருதலைக் காதல் காரணமாக மற்றொரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண் வைஷாலி. 24 வயதான வைஷாலி, பல் மருத்துவராக உள்ளார். இவருக்கு நேற்றைய தினம் நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது. அதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு தான் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பான வீடியோவும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வீட்டில் நுழைந்த 100 பேர்
ரங்கா ரெட்டி மாவட்டம், அடிபட்லா கிராமத்தில் தான் இந்தப் பெண் தனது சொந்த வீட்டிலிருந்து கடத்தப்பட்டார். நிச்சியதார்தத்திற்கு சில மணி நேரம் மட்டுமே இருந்த நிலையில், திடீரென ஒரு கும்பல் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்துள்ளது. அத்துமீறி நுழைந்த அந்த கும்பல் பெண்ணை வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றது. சுமார் 100 இளைஞர்கள் தங்கள் வீட்டில் அத்துமீறி நுழைந்து தங்கள் மகள் வைஷாலியை கடத்திச் சென்றதாக அப்பெண்ணின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். மேலும், பெண்ணின் வீட்டையும் சேதப்படுத்தியுள்ளனர்.

பரபர வீடியோ
இணையத்தில் பரவும் அந்த வீடியோவில் சுமார் 40 இளைஞர்களைப் பார்க்க முடிகிறது. அவர்கள் பெண் மருத்துவரின் வீட்டை சேதப்படுத்துகின்றனர். காரை உடைத்து நொறுக்கும் அவர்கள், வீட்டில் இருந்தும் ஒருவரை இழுத்து தடிகளை கொண்டு அடித்து நொறுக்குகின்றனர். இந்தச் சம்பவத்திற்கு நவீன் ரெட்டி என்ற இளைஞர் தான் காரணம் என்று வைஷாலியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி வைஷாலியை துரத்தி டார்ச்சர் செய்து வந்துள்ளான் இந்த நவீன் ரெட்டி.

பெரிய கும்பல்
அந்தப் பெண்ணுக்குத் திருமணம் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதைத் தெரிந்து கொண்டு தான் இந்த கும்பலைக் கொண்டு பெண்ணை கடத்தியுள்ளார். நவீன் ரெட்டி அப்பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. தனது டீக்கடையில் வேலை செய்த நபர்களிடம் தனது மனைவி தன்னுடன் வாழ மறுத்துவிட்டு, தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டதாகவும் அவரை அழைத்து வர உதவி வேண்டும் என்றும் கேட்டே இந்தக் கும்பலை அழைத்து வந்ததாகத் தெரிகிறது. இந்தக் கடத்தல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது
வைஷாலியும் நவீனும் காதலித்தது உண்மை தான். இருப்பினும் அவர்கள் பிரேக் அப் செய்து கொண்டதாகவும் நவீனை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் வைஷாலி தெரிவித்துள்ளார். அந்தப் பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசார் ஒரே மணி நேரத்தில் அந்தப் பெண்ணை மீட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இருப்பினும், முக்கிய குற்றவாளியான நவீன் இன்னும் தலைமறைவாக உள்ளார். அவரை தேடி வரும் போலீசார், மற்றவர்களையும் அடையாளம் கண்டு கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

போலீசார் தகவல்
இது குறித்து அப்பகுதி போலீசார் கூறுகையில், "வைஷாலி பல் மருத்துவராக உள்ளார். அவர் முன்னாள் ராணுவ வீரரின் மகளாகும். நவீனை அந்தப் பெண் அருகே பேட்மிண்டன் விளையாடச் செல்லும் போது சந்தித்துள்ளார். இருவரும் காதலித்துள்ளனர். டீக்கடையுடன் மார்க்கெட்டிங் பிசினஸையும் நவீன் நடத்தி வருகிறான். அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு நவீன் அந்தப் பெண்ணுக்கு கார் ஒன்றையும் வாங்கிக் கொடுத்ததாகச் சொல்கிறார். ஆனால், இதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஒரு கட்டத்தில் நவீன் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வைஷாலியை கேட்டுள்ளார். இருப்பினும், அதற்கு அவர் சம்மதிக்கவில்லை என தெரிகிறது. அப்போதில் இருந்தே அவன் அந்தப் பெண்ணை டார்ச்சர் செய்ய தொடங்கிவிட்டார்" என்றார்.

என்ன நடந்தது
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் டார்ச்சர் செய்துள்ளான். மேலும், நேரிலும் பின்தொடர்ந்து துன்புறுத்தியுள்ளான். இது தொடர்பாக வைஷாலி ஏற்கனவே போலீசிலும் புகார் அளித்துள்ளார். இந்தச் சூழலில் தான் வைஷாலிக்கு நேற்று நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. அப்போது தான் நவீன் சுமார் 50க்கும் மேற்பட்டோருடன் அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அவரை கடத்தியுள்ளார். மேலும், வீட்டையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். இருப்பினும், கடத்தி ஒரே மணி நேரத்தில் என்ன நடந்ததோ தெரியவில்லை, அவர்களே பெண்ணை விட்டுவிட்டனர். அதன் பின்னரே அந்தப் பெண் தனது பெற்றோரைக் கால் செய்துள்ளார். இதையடுத்து போலீசாருடன் வந்து அந்தப் பெண்ணை அவர்களின் பெற்றோர் மீட்டுள்ளனர்.