தப்பு பண்ணா தண்டனை அனுபவிக்கட்டும். . டோன்ட் கேர்! யாரை சொல்கிறார் மம்தா?
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் அமைச்சர் பர்த்தா சாட்டர்ஜி கைது செய்யபட்டுள்ள நிலையில், குற்றம் செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்தாலும் அதைப்பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலத்தின் கல்வித்துறையில் ஆசிரியர் பணி நியமனத்தில் பெரும் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. ஆதாரத்தின் பேரில் கிடைத்த தகவலால், அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
இதில், குறிப்பாக மாநிலத்தின் தற்போதைய கல்வி அமைச்சரான பரேஷ் சி மற்றும் தொழில் அமைச்சர் பர்த்தா சட்டர்ஜி, மானிக் பட்டாச்சாரியா மற்றும் அவர்களுக்கு நெருங்கிய நபர்களின் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

கட்டுக்கட்டாக பணம்
அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட இந்த திடீர் ரெய்டில் அமைச்சர் பர்த்தா சட்டர்ஜிக்கு நெருங்கிய கூட்டாளியும் நடிகையுமான அர்பிதா முகர்ஜி என்பவர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது வீட்டில் இருந்து மட்டும் 500 ரூபாய் நோட்டுகள், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் என கோடிக்கணக்கான பணம் இந்த ரெய்டில் சிக்கியது. என்னடா இது அள்ள அள்ள ரூயாய் நோட்டுகள் வந்துகொண்டிருக்கிறது என்பது போல அமலாக்கத்துறை அதிகாரிகள் மலைத்து போயினர். அவர்கள் வங்கி அலுவலர்களை நேரில் அழைத்து பணம் எண்ணும் இயந்திரத்தின் உதவியும் எவ்வளவு பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதை கணக்கிட்டனர்.

ரூ.20 கோடி பறிமுதல்
இதில்அர்பிதா முகர்ஜியின் வீட்டில் மட்டும் சுமார் ரூ.20 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்தனர். இந்த பணம் 10-ம் வகுப்பு தேர்வின் போது பெறப்பட்ட ஊழல் பணமாக இருக்கலாம் என அமலாக்கத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதற்கிடையே மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் அர்பிதா முகர்ஜிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை சுட்டிக்காட்டும் வகையில், மேற்கு வங்காள எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக தலைவருமான சுவேந்து அதிகாரி, தனது ட்விட்டரில் முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுடன் அர்பிதா முகர்ஜி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் கைது
ஆனால், அமலாக்கத்துறை சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தங்கள் கட்சிக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கியிருக்கும் நபர் அதிகாரிகளிடம் தக்க விளக்கத்தை அளிக்க வேண்டும். இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பங்கு எதுவும் இல்லை என்று தெரிவித்திருந்தது. எனினும் நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் பர்த்தா சட்டர்ஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. 69 வயதான பர்த்தா சாட்டர்ஜி தற்போது மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மந்திரிசபையில் வணிகம் மற்றும் தொழில்துறை மந்திரியாக இருக்கிறார். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் மட்டுமல்ல, மம்தாவின் நம்பிக்கைக்கு உரியவர். மம்தாவின் முந்தைய ஆட்சியின்போது 2014-2021-ம் கால கட்டத்தில் கல்வி மந்திரி பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மவுனம் கலைத்த மம்தா
இந்த சம்பவம் நடைபெற்று இரண்டு நாட்கள் ஆன நிலையில், இன்று இந்த விவகாரம் குறித்து மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மவுனம் கலைத்துள்ளார். மம்தா பானர்ஜி கூறுகையில், நான் எந்த தவறான செயல்களையும் ஊழல் முறைகேட்டையும் ஆதரிக்க மாட்டேன். யாராவது குற்றம் செய்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தாலும் அதைப்பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. எனவே, எனது பெயரை இதில் இழுக்காதீர்கள். நான் அரசு சம்பளத்தைக் கூட பெறுவது கிடையாது. இருந்தாலும், தனிப்பட்ட முறையில் நான் வேதனை அடைந்தேன். இத்தகைய முறைகேட்டில் பார்த்தா சட்டர்ஜி ஈடுபடுவார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. எனினும், இதில் சதித்திட்டம் எதுவும் இருக்காது என எப்படி நாங்கள் அறிந்து கொள்வது? இந்த விவகாரத்தில் நடைபெறும் ஊடக விசாரணை குறித்து நான் கருத்து எதுவும் தெரிவிக்க போவது இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications