மசூதிக்குள் பிரிவினை கோஷம்? 13 பேர் தேசத்துரோக வழக்கில் கைது! ஜம்மு காஷ்மீரில் போலீசார் நடவடிக்கை
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் மசூதியில் நாட்டுக்கு எதிராகவும், பிரிவினையை தூண்டும் வகையிலும் கோஷமிட்ட 13 பேர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் மிகப்பெரிய ஜாமியா மசூதி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இங்கு மக்களுக்கு அனுமதியில்லை.
தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வந்துள்ளதால் ரம்ஜான் பண்டிகையையொட்டி கடந்த மாதம் முதல் மசூதிக்குள் மக்கள் சென்று வருகின்றனர்.

24 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள்
வெள்ளிக்கிழமையான நேற்று முன்தினம் மசூதியில் 24 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் திரண்டு தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்த பிறகு சிலர் பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும், நாட்டுக்கு எதிராகவும் கோஷமிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்த மசூதி நிர்வாகிகள் அவர்களை தடுத்து அறிவுரை வழங்கினர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை.

13 பேர் கைது
இதனால் அவர்களை வெளியேற்ற முயன்றனர். அப்போது இருதரப்புக்கும் இடையே மோதல் உருவானது. இருப்பினும் கோஷமிட்ட நபர்கள் மசூதியில் இருந்து வெளியேற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் மசூதிக்கு வெளியேயும் அதேபோன்று கோஷம் எழுப்பினர். இதையடுத்து கண்காணிப்பு பணியில் இருந்த போலீசார் 13 பேரையும் கைது செய்தனர்.

தேசத்துரோக வழக்கு
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‛‛வெறுப்பு, பிரிவினை தூண்டும் வகையில் கோஷமிட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 124 ஏ(தேசத்துரோகம்) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பஷ்ரத் நபி மற்றும் உமர் மன்சூர் செய்க் ஆகியேர் தான் முக்கிய நபர்கள். இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு சில இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளோம். இவர்கள் மீது பிசிஏ எனும் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க உள்ளோம்'' என்றார். பிசிஏ சட்டத்தின் கீழ் மாநிலம் அல்லது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்களை இரண்டு ஆண்டுகள் வரை காவலில் வைத்து விசாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்., பயங்கரவாத அமைப்பு அறிவுரை
இதுபற்றி மூத்த போலீஸ் சூப்பிரண்டு ராகேஷ் பல்வால் சார்பில், ‛‛முதற்கட்ட விசாரணையில் வெள்ளிக்கிழமை தொழுகையை சீர்குலைக்கவும், சட்டம்-ஒழுங்கை பாதிக்க செய்யவும் பாகிஸ்தானிய பயங்கரவாத அமைப்புக்களிடம் இருந்து அறிவுரை வந்திருப்பதை கண்டு பிடித்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என்றார்.












Click it and Unblock the Notifications